சென்னை: வடநாட்டில் இருந்து சென்னை வந்த ரயில் மூலம், சுமார் 10 கிலோ அளவிலான கஞ்சா கடத்தி வந்த இளம்பெண் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அந்த இளம்பெண் வடமாநிலத்தில் ஒரு பத்திரிகையின் செய்தியாளர் என்பது தெரிய வந்துள்ளது.
நாடு முழுவதும் கஞ்சா உள்பட போதை பொருட்கள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த போதை பொருள் கடத்தில் மன்னாக திகழ்ந்த முன்னாள் திமுக நிர்வாகியான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். விசாரணையில், இவர் சென்னையில் இருந்து இந்தியா முழுவதும் மட்டுமின்றி பல வெளிநாடுகளுக்கும் உணவுபொருட்களுடன் சேர்த்து போதை பொருளை கடத்தியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சென்னை உள்பட நாடு முழுவதும் தீவிர வேட்டையில் இறங்கி வருகின்றனர்.
இநத் நிலையில், சென்னை ரயில்வே நிலையத்தில், ரயில்வே போலீசார் சோதனையிட்டபோது, பண்டல், பண்டலாக 10 கிலோ அளவிலான கஞ்சா கடத்தி வந்த 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இளம்பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அந்த இளம்பெண் பெயர் ஜோதிகா தாஸ் (வயது 25) என்பதும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த என்பதும் அவர் ஒடிசாவில் உள்ள பத்திரிகையில் செய்தியாளராக பணிபுரிந்து வருவதாக தெரிவித்துள்ளார். உண்மையிலேயே இவர் பத்திரிகையாளர்தானா அல்லது பத்திரிகையாளர் போர்வையில் போதை பொருள் கடத்தும் நபரா என்பது குறித்தும், இவர், சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் கேங்கா, யாருக்காக கஞ்சா கடத்தி வந்தார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே பிரஸ், ஊடகம் என்ற பெயரில் பலர் போலியான அடையாள அட்டையை வைத்துக்கொண்டு, மொள்ளமாரித்தனம் செய்து வரும் நிலையில், தற்போது இளம்பெண் ஒருவர் பத்திரிகையாளர் என்று கூறிக்கொண்டு ரயிலில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.