கூகுள் நிறுவனத்தின் பில்லிங் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத 10 இந்திய நிறுவனங்களின் செயலிகளுக்கு எதிராக மார்ச் 1 முதல்
உலகின் இரண்டாவது பெரிய இணையச் சந்தையாக விளங்கும் இந்தியாவில் கூகுள் நிறுவனத்திற்கும் இந்திய நிறுவனங்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலின் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த நிறுவனங்களின் செயலிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து கூகுள் ப்ளே தெரிவிக்கவில்லை என்றபோதும் மேட்ரிமோனி இயங்குதளமான Shaadi.com, ஸ்ட்ரீமிங் இயங்குதளங்களான Altt, Stage மற்றும் Aha இன் ஆண்ட்ராய்டு பயன்பாடுகள் மற்றும் டேட்டிங் பயன்பாடான Quack Quack ஆகியவை Google Play Store இலிருந்து தற்போது அகற்றப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் கூகுளின் ஆப் பில்லிங் கொள்கைக்கு எதிரான வழக்கில் மனுதாரர்களாக இருந்தது ஊடகங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.
கூகுளின் பில்லிங் கொள்கை குறித்து இந்நிறுவனங்களுக்கு மூன்றாடுகளுக்கு முன்பே அறிவித்திருந்தபோதும், இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.
இந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 9ம் தேதி நடைபெற்ற நிலையில் மேட்ரிமோனி.காம், ஷாதி.காம் போன்ற இணைய நிறுவனங்களின் செயலிகளை ப்ளே ஸ்டோரில் தொடர்ந்து பட்டியலிட இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என்று கூறிய நீதிமன்றம் வழக்கு விசாரணையை மார்ச் 19க்கு ஒத்திவைத்தது.
இதனையடுத்து 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வழக்கு விசாரணை முடியும் வரை தங்கள் செயலிகள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது என்று கூகுள் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இருந்தபோதும் ஒருசில நிறுவனங்கள் தங்கள் நிலுவைத் தொகையை செலுத்தி ப்ளே ஸ்டோரில் தொடர முன்வந்துள்ளன.
சுமார் 2,00,000 இந்திய ஆப் டெவலப்பர்கள் கூகுள் ப்ளே ஸ்டோரின் பில்லிங் கொள்கையை ஏற்றுள்ள நிலையில் இதனை ஏற்றுக்கொள்ளாத நிறுவனங்களின் செயலியை இன்றுமுதல் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்க கூகுள் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.