டெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10சதவிகித இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கிய நிலையில், அதற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பில், அரசியலமைப்பின் 103 வது திருத்தத்தின்படி, பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களை மீறாது என்று தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், உயர் வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டிற்கு, மன்மோகன்சிங் அரசின் முயற்சியே காரணம் என்றும், இந்த சட்ட மசோதாவை நிறைவேற்ற மோடி அரசு ஐந்து வருடங்கள் தாமதம் செய்தது என காங்கிரஸ் கட்சி தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டியலிடப்பட்ட சாதிகள், பழங்குடியினர் அல்லாத, பிற உயர் சாதிகளைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் 103வது அரசியல் சட்டத் திருத்தத்தை உறுதி செய்யும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்கிறது.
கடந்த மன்மோகன்சிங்கின் அரசு மேற்கொண்ட முயற்சியால் 2010 ஆம் ஆண்டு ஜூலையில் 10 சதவீத இடஒதுக்கீடு குறித்த அறிக்கையை சின்ஹோ ஆணையம் சமர்ப்பித்தது. 2014ம் ஆண்டிற்குள் இதற்கான சட்ட திருத்த மசோதா தயாராகி விட்ட நிலையில் அந்த மசோதாவை நிறைவேற்ற மோடி அரசு ஐந்து வருடங்கள் எடுத்துக் கொண்டது. மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக தாம் இருந்தபோது, 2012ஆம் ஆண்டு, சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பு முடிக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட சாதி ரீதியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு குறித்த தனது நிலைப்பாட்டை மோடி அரசு இன்னும் தெளிவுபடுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஏழைகளுக்கு சமூக நீதியை வழங்குவதற்கான தனது “மிஷனில்” பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த “வெற்றி” என்று பாஜக கூறி உள்ளது. பள்ளி கல்லூரிகளில், சேர்க்கை மற்றும் அரசு வேலைகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (EWS) 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் 103வது அரசியலமைப்புத் திருத்தத்தின் செல்லுபடியை உறுதி செய்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் பாராட்டியுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி உமாபாரதி வெளியிட்டுள்ள டிவிட்டில், “எல்லா ஏழைகளும் ஒரே சாதி தான், அது ‘ஏழை’ என்ற சாதி. இந்த இடஒதுக்கீடு நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்தும்.உலகில் உள்ள அனைத்து ஏழை மக்களும் ஒன்றிணைந்து தங்களுக்கான சிறந்த வாழ்க்கைக்காக போராட வேண்டும்” என்றும், இந்த இடஒதுக்கீடு தனியார் துறையிலும் கொண்டுவர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
“உச்சநீதிமன்றம் இடஒதுக்கீடு இல்லாத பிரிவினருக்கான EWS இடஒதுக்கீட்டின் சட்டப்பூர்வமான தன்மையை உறுதிப்படுத்துகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் கரீப் கல்யாணின் பார்வைக்கு மற்றொரு பெரிய வரவு. சமூக நீதியின் திசையில் ஒரு பெரிய ஊக்கம்,” என்று பாஜக பொதுச் செயலாளர் (அமைப்பு) பி எல் சந்தோஷ் கூறினார்.
இந்தத் தீர்ப்பு மோடியின் சப்கா சாத் சப்கா விஸ்வாஸ் உறுதிமொழியை வலுப்படுத்துவதாக தெலுங்கானா எம்பி பண்டி சஞ்சய் குமார் கூறினார்.
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அனைத்து சாதிகள் மற்றும் மதங்களைச் சேர்ந்த ஏழை மற்றும் நலிந்த பிரிவினருக்கு பெரும் நிம்மதியைத் தரும். “இன்று உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான தீர்ப்பு ஏழைகளை பிரதான நீரோட்டத்திற்கு கொண்டு வருவதற்கு நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ள மகாராஷ்டிர அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல், “சுப்ரீம் கோர்ட் EWS இடஒதுக்கீட்டிற்கு அனுமதி வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதன் கீழ், சாதி, சமூகம் மற்றும் மதம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட தனிநபர்கள் ஒதுக்கீட்டைப் பெற தகுதியுடையவர்கள். மேலும், இந்த ஒதுக்கீடு ஏழை மாணவர்களுக்கு கல்வியைத் தொடரவும், வேலை வாய்ப்பைப் பெறவும் பொன்னான வாய்ப்புகளைத் தரும் என்றார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த மற்றொரு அமைச்சர் சுதிர் முங்கந்திவார், “நீங்கள் எந்த ஜாதியில் பிறக்க விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் தேர்வு செய்ய முடியாது. முன்பதிவு செய்து நீங்கள் எந்த மதத்திலும் பிறக்க மாட்டீர்கள். எனவே, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், யாரேனும் தவறு செய்யாமல் நிதி நெருக்கடியை எதிர்கொண்டால், மத்திய, மாநில அரசுகள் இணைந்து சட்டம் இயற்ற வேண்டும் என்று அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளார். சாதி, மதம் எதுவாக இருந்தாலும், அனைவருக்கும் வாழ உரிமை உண்டு, வேலை வாய்ப்பு பெற உரிமை உண்டு என தெரிவித்துள்ளார்.
குஜராத் ஆம் ஆத்மி கட்சியின் (AAP) தலைவர் கோபால் இத்தாலியா EWS பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அனுமதிக்கும் தீர்ப்பை வரவேற்று, “உச்சநீதிமன்றம் எடுத்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம், இதனால் பலர் பயனடைவார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்கள் இடஒதுக்கீட்டின் பலனைப் பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது நாட்டில் உள்ள பலரின் கோரிக்கையாக இருந்தது மற்றும் படிதார் அனமத் அந்தோலன் சமிதி (PAAS) ஒரு இயக்கத்தை (படிதார்களுக்கான OBC ஒதுக்கீட்டுக்காக) தொடங்கியுள்ளது. லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பில் அரசாங்கம் திருத்தங்களைச் செய்தது. சில குழுக்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. அரசியலமைப்புத் திருத்தத்துக்கு ஆதரவாக நீதிபதிகள் அடங்கிய கூட்டுக் குழுவின் உச்ச நீதிமன்ற உத்தரவை வரவேற்கிறோம் என்று தெரிவித்து உள்ளர்.
10% இட ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 10% இட ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு. சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும். முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும். சமூக நீதிக்கு எதிரான முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்வோம் என தெரிவித்துள்ளார். இதனிடையே, திமுக வழக்கறிஞர் வில்சன் கூறுகையில், 10% இட ஒதுக்கீட்டை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் முதல் வழக்கு திமுகவுடையது. 10% இட ஒதுக்கீட்டால் மற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்திருந்தார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு உறுதி என்ற தீர்ப்புக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறும்போது, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் சரித்திர தீர்ப்பை கொடுத்துள்ளது. பிரதமர் மோடி கொண்டு வந்த இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை வரவேற்கிறோம். யாருக்கும் எங்கேயும் இதனால் பாதிப்பு இல்லை. அதே நேரத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய பலருக்கு இது உதவும் என்று தெரிவித்துள்ளதுடன், 10% இடஒதுக்கீடு தீர்ப்பு குறித்து திமுக விஷமத்தனமாக பிரச்சாரம் செய்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.