சென்னை: சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி மற்றும் அதனை சுற்றிய கோயில்கள் அனைத்தும் நாளை  11மணி நேரம் மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதுபோல தமிழ்நாட்டிலும் பல கோவில்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நிலவு மறைப்பு அல்லது சந்திர கிரகணம் (lunar eclipse) என்பது சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது மட்டுமே சாத்தியமாகிறது. நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் சூரிய கிரகணம் என்றும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.  எனவே ஒரு முழுநிலவு நாளில் மட்டுமே நிலவு மறைப்பு நிகழ்கிறது. சந்திர கிரகணத்தின்போது சந்திரன் பகுதி சிவப்பு நிறத்தில் தோன்றும். எனவே, இது பிளட் மூன் என்றும் அழைக்கப்படுகிறது.

சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது.. முழு சூரிய கிரகணம் என்றும், ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் அது.. பகுதி சூரிய கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. அந்தவகையில், வரும் நவம்பர் 8ம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. மத நம்பிக்கைகளின்படி, கிரகணம் நிகழும் நேரம் சற்று அசுபமாக கருதப்படுகிறது. அந்த வகையில் கிரகணம் நிகழும் வேளையில் பல்வேறு கோயில்களின் நடை அடைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  நாளை (நவ. 8) முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இது  இந்தியாவின் கிழக்கு நகரங்களில் தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திர கிரகணம் நாளை மதியம் 2.39 மணியில் இருந்து மாலை 6.27 மணிவரை நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பதி தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட  கோயில் அனைத்தும் நாளை காலை 8.30 மணியில் இருந்து மாலை 7.30 வரை நடை சாத்தப்பட்டிருக்கும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அறிவித்துள்ளது. மேலும், சர்வதரிசனம் பிரிவில் பக்தர்கள் காலை 7.30 மணியில் இருந்து 8.30 வரை அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பின்பு, இரவு 7.30 மணிக்கு நடை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு, திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜா மற்றும் ஸ்ரீ கோதண்டராமர் கோயில்களிலும், திருச்சானூரில் உள்ள ஸ்ரீ பத்மாவதி அம்மாவாரி கோயிலிலும், ஸ்ரீநிவாச மங்காபுரத்தில் உள்ள ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வரா கோயிலிலும் கிரகணத்திற்கு பின்னான சமய சடங்குகள் செய்யப்படும் எனவும் தெரிகிறது.

இரவு 8 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயிலில் அபிஷேகம், அலங்காரம், சஹஸ்ரநாம அர்ச்சனை மற்றும் ஏகாந்த சேவை ஆகிய சடங்குகள் பின்னர் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று சந்திர கிரகணத்தினால், தமிழ்நாட்டிலும், பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலின் அனைத்து சன்னிதானங்களும் பிறப்பகல் 2.30 மணிக்கு மேல் அடைக்கப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது. சந்திரகிரணகத்திற்கு நடை திறக்கப்பட்டு பிற பூஜைகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.