டெல்லி: நாடு முழுவதும் அதிக கொரோனா தொற்றுள்ள 10 மாவட்டங்களில் 8 மாவட்டங்கள் மகாராஷ்டிராவில் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: நாடு முழுவதிலும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோரின் வாராந்திர விகிதம் 5.65 சதவிகிதமாக உள்ளது. மகாராஷ்டிராவில் வாராந்திர விகிதம் 23 சதவிகிதம். பஞ்சாபில் 8.82 சதவிகிதம், சத்தீஸ்கரில் 8 சதவிகிதம், மத்தியப் பிரதேசத்தில் 7.82 சதவிகிதம் ஆக இருக்கிறது.

தமிழகத்தில் 2.50 சதவிகிதம், கர்நாடகாவில் 2.45 சதவிகிதம், குஜராத்தில் 2.2 சதவிகிதம், தில்லியில் 2.04 சதவிகிதம் என கணக்கிடப்பட்டு உள்ளது. ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளைக் கொண்டு பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பது அவசியம்.

பெரும்பாலான மாநிலங்களில் தனிமைப்படுத்துதல் கடைப்பிடிக்கப்பட வில்லை. வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால், வீட்டில் தனிமையில் உள்ளார்களா என்பதை கண்காணிப்பதில்லை. அப்படி கடைப்பிடிக்கவில்லை என்றால், அவர்களை ஏதேனும் தங்குமிடத்தில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.