திருவண்ணாமலை நகரையொட்டி அமைந்துள்ள ஜவ்வாது மலையில் உள்ள இந்தியன் வங்கி ஒன்றில் திடீரென டெப்பாசிட்டான 10 கோடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முழுக்க முழுக்க பழங்குடி மக்கள் ஒரு லட்சம் பேர் வசிக்கும் இப்பகுதியில் பிரதரின் ரூபாய் நோட்டு தடை நடவடிக்கைக்கு பின்பு இதுவரை இல்லாத அளவுக்கு திடீர் என்று அப்பகுதி மக்கள் புற்றீசல்போல வங்கிக்கு படையெடுத்து வந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை டெப்பாசிட் செய்த வண்ணம் இருந்தனர்.
நவம்பர் 13-ஆம் தேதி மட்டும் அந்த வங்கியில் ரூ.2.57 கோடி டெப்பாசிட் ஆகியிருக்கிறது. நவம்பர் 8-ஆம் தேதிக்கு பிறகு இதுவரை டெப்பாசிட்டான மொத்த தொகை 10 கோடியாகும். இது எப்படி சாத்தியம் என்பது தெரியாமல் விழி பிதுங்கிய நிலையில் வங்கி ஊழியர்கள் இருந்தனர்.
செம்மரக் கடத்தல்காரர்கள் உட்பட சில சமூகவிரோதிகள் தாங்கள் சட்டவிரோதமாக சேர்த்த பணத்தை அந்த கிராம மக்கள் வழியாக வெள்ளைப் பணமாக மாற்ற முயல்வதாக சந்தேகிக்கப்படுகிறது. தங்கள் அக்கவுண்ட் வழியாக இதை செய்து தருவதற்கு அக்கிராம மக்களுக்கு ரூ.5,000 முதல் 10,000 வரை கமிஷனாக தரப்படுவதாக செய்திகள் பரவி வருகின்றன.
இதுபற்றி காவல்துறையும் வருமானவரித்துறையும் இணைந்து விசாரணை நடத்தவுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.