சென்னை,

ட்சி அமைக்க சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமிக்கு கவர்னர் அழைப்பு விடுத்ததையடுத்து, கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கி இருந்த எம்.எல்.ஏ.க்கள் உற்சாகத்தில் கொண்டாடி  வருகின்றனர்.

அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் பன்னீர்செல்வம்  போர்க்கொடி தூக்கியதை தொடர்ந்து, ஓபிஎஸ்-ஐ கட்சியில் இருந்து நீக்கி சசிகலா நடவடிக்கை எடுத்தார். மேலும், தானே முதல்வராக முயற்சி செய்தார். இதற்கிடையில் அவர் சிறைக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டதால், அவரது ஆதரவு எடப்பாடி பழனிசாமி முதல்வராக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டார்.

அதிமுக எம்எல்ஏக்கள் பன்னீருக்கு ஆதரவாக மாறிவிடுவார்களோ என பயந்த சசிகலா தரப்பபு, அவர்கள் அனைவரையும் கூவத்தூர் தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று சொகுசு சிறையில் அடைந்தனர். கடந்த  10 நாட்களாக  அங்கே தங்கி உள்ள எம்எல்ஏக்கள் தங்கள் குடும்பத்தினரிடம் கூட பேச முடியாமல் தவித்து வந்தனர்.

இன்று காலை கவர்னர் எடப்பாடியை ஆட்சி அமைக்க அழைத்திருப்பதால், இன்று மாலை 4 மணிக்கு கவர்னர் மாளிகையில் எளிய முறையில், தமிழக புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து கூவத்தூரில்  தங்கி உள்ள அதிமுகவை சேர்ந்த  எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்,  வாரிய தலைவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவக்ரள் அங்கிருந்து உடனடியாக வெளியேற ஆயத்தமாகி வருகின்றனர்.  பிற்பகல் 2.15 மணிக்கு அங்கிருந்து சென்னையை நோக்கி கிளம்புகின்றனர். அதற்கு தயாராக சொகுசு பேருந்துங்களும் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை திரும்ப ரெடியாக இருக்கும்படி கட்சி தலைவர்கள் அறிவித்ததையடுத்து,   கடந்த 10 நாட்களாக எந்த நேரத்தில் என்ன நடக்கும், யார் வருவார்கள்… என்ன சொல்வார்கள் என  திக் திக் மனநிலையில்  திகிலுடன் காணப்பட்ட  எம்.எல்.ஏ.க்கள் இன்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

ஒருசிலர் இங்கிருந்து விடுதலை ஆகி வெளியேறப் போகிறோம் என்ற  மகிழ்ச்சியிலும், வேறு சிலர் சசிகலா ஆதரவு  ஆட்சி அமையப் போகிறது  என்ற உற்சாகத்திலும் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.

இன்று மாலை பதவி ஏற்பு விழா நடைபெற இருப்பதால் அனைவரையும் உடனடியாக சென்னை அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.