சென்னை: சமீபத்தில் நடைபெற்ற குரூப்-1 தேர்வுக்கான உத்தேச விடைப் பட்டியலில், 10 கேள்விகளுக்கான பதில்கள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக, போட்டித் தேர்வுகளுக்கான தனியார் பயிற்சி மையங்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், துணை காவல்-கண்காணிப்பாளர், துணை ஆட்சியர், துணைப் பதிவாளர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி உள்ளிட்ட 181 பதவிகளுக்கு, ஆட்களைத் தேர்வுசெய்வதற்கான குரூப் – 1 தேர்வை, டி.என்.பி.எஸ்.சி. நடத்தியது.

தேர்வு முடிவடைந்த நிலையில், அதற்கான உத்தேச விடைப் பட்டியலை வெளியிட்டுள்ளது மாநில பணியாளர் தேர்வாணையம். அதில்தான் இப்போது சர்ச்சை எழுந்துள்ளது.

அந்த உத்தேச விடைப் பட்டியலில், மொத்தம் 10 கேள்விகளுக்கான விடைகள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளன என்று போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடக்கநிலை தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அவை ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண்கள். எதிர்மறை மதிப்பெண்கள் கிடையாது.

– மதுரை மாயாண்டி