சென்னை:

ராஜீவ் கொலை வழக்கு கைதியான பேரறிவாளனின் தந்தை உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் நிலை யில், பேரறிவாளனுக்கு, சிறைத்துறை  ஒரு மாதம் பரோல் வழங்கி உள்ளது. அதையடுத்து இன்று காலை அவர் வேலூர் சிறையில் இருந்து  பாதுகாப்புடன் வெளியே வந்தார்.

ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, கடந்த கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடி வருகிறார் பேரறிவாளன்.

ஏற்கனவே தனது தந்தை உடல்நிலையை காரணம் காட்டி,  கடந்த 2017ம் ஆண்டு இரண்டு மாத பரோல் பெற்று சிறையில் இருந்து வெளியேறி, குடும்பத்தினருடன் இருந்து வந்தார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போது அவரது தந்தை குயில்தாசன் உடல்நலம் சரியில்லாமல், தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரைக்காண மீண்டும் பரோல் கேட்டு பேரறிவாளன் விண்ணப்பம் அளித்திருந்தார். அவரது விண்ணப்பம் குறித்து ஆய்வு செய்த தமிழகஅரசு, சிறைத்துறை பரிந்துரையை ஏற்று அவருக்கு 1 மாதம் பரோல் வழங்கி கடந்த 7ந்தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, பேரறிவாளன்   புழல் சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

பேரறிவாளன் நேற்றே சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று காலை 7 மணி அளவில்  பேரறிவாளன் பரோலில் வெளியே வந்துள்ளார். அவரை காவல்துறையினர் பாதுகாப்புடன் அவரது சொந்த ஊரான  ஜோலார்பேட்டைக்கு  அழைத்துச் சென்றனர்.

அவருக்கு  விதிகளுக்கு அப்பாற்பட்டு எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என சிறைத்துறை நிபந்தனை விதித்துள்ளது. பேரறிவாளனுக்கு பரோல் கிடைப்பது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.