சென்னை: இன்று நடைபெற்ற தொழில்வளர்ச்சி 4.0 மாநாட்டில் வான்வெளி-பாதுகாப்பு தொழில் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது, இன்று கையெழுத்தாகி உள்ள ஒப்பந்தங்கள் மூலம் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்தார்.
தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் “நாளையை நோக்கி இன்றே – தலை நிமிர்ந்த தமிழ்நாடு” எனும் தொழில் வளர்ச்சி 4.0 மாநாடு சென்னை தரமணியில் உள்ள டைடல் பார்க்கில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் தமிழ்நாடு வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கையை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டு பேசினார். அப்போது, மாநிலத்தில் உற்பத்தி மேற்கொள்ளும் வான்வெளி மற்றும் பாதுகாப்பு முதலீட்டாளர்களுக்கு சிறப்பான ஊக்கத்தொகுப்புச் சலுகை அளிக்கப்பட்டு, இத்துறையின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். குறிப்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு, இக்கொள்கை பெருமளவில் ஆதரவு வழங்கிடும் என்றவர், இக்கொள்கையின் மூலம் 10 ஆண்டு காலகட்டத்திற்குள் வான்வெளி மற்றும் பாதுகாப்பு ரூ. 75 ஆயிரம் கோடி முதலீடு மற்றும் 1 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து, டிட்கோ மற்றும் சீமென்ஸ் நிறுவனங்கள் இணைந்து, 251.54 கோடி ரூபாய் செலவில் டைடல் பார்க்கில் அமைந்துள்ள “டான்செம்”, மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பேசினார். அப்போது, இத்தகு திறன்மிகு மையம் நம் நாட்டில் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ளது என்பதே இதன் சிறப்பம்சம் என்றவர், வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை, மின் வாகனங்கள், தொழில் இயந்திரங்கள், கடல்சார் தொழில்நுட்பம் , பசுமை சக்தி மற்றும் பெட்ரோ கெமிக்கல், உயிரியல் தொழில் நுட்பத்துறை, தொழிற்சாலைகளின் தானியக்கம் சார்ந்த திட்டங்களுக்கு, ரோபாடிக்ஸ், உற்பத்திப் பொருட்களை இணையத்துடன் இணைக்கும் வளையமைப்பு, ஆக்மென்டட் ரியாலிட்டி, விர்ச்சுவல் ரியாலிட்டி, மிக்ஸ்டு ரியாலிட்டி, சேர்க்கை உற்பத்தி, டிஜிட்டல் டிவின்ஸ் போன்ற அதி நவீன தொழில் நுட்பங்களை வழங்கிடும் வகையில் டான்செம் திறன்மிகு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
டிட்கோ மற்றும் ஜி.இ. ஏவியேஷன் நிறுவனங்கள் இணைந்து, ரூ. 141 கோடி முதலீட்டில் உருவாக்கியுள்ள, 3டி அச்சிடுதல் தொழில் நுட்பத்தில், உலகத்தரம் வாய்ந்த சேர்க்கை உற்பத்திக்கான டாம்கோ திறன்மிகு மையத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஜி.இ. ஏவியேஷன் நிறுவனத்தின் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை உபயோகப்படுத்தி, சேர்க்கை உற்பத்தியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டினை செம்மைப்படுத்திக் கொள்ள டாம்கோ உதவும். மேலும், குறு, சிறு நிறுவனங்கள், புத்தொழில்கள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றிற்கு சாத்தியக்கூறு ஆய்வுகள், முன்மாதிரி சேர்க்கை பகுதிகள் போன்ற துறைகளில் ஆலோசனை சேவைகளும் வழங்கும். அறிவுசார் சொத்துரிமை மூலம் வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளின் பயன்பாடுகளுக்கான உலோக 3டி அச்சிடுதல், மருத்துவம் மற்றும் மோட்டார் வாகனத்துறைகளில் அதிநவீன உற்பத்தித் தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் அத்துறைகளுக்கு ஒரு தனித்துவம் ஏற்படுத்தித் தருவது, டாம்கோவின் முக்கிய நோக்கமாகும்.
சில மாதங்களுக்கு முன் “டஸோ” நிறுவனத்தின் திறன்மிகு மையத்தை டைடல் பூங்காவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த திறன்மிகு மையங்களில், தொழிலாளர்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும், தொழிற்சாலைக்கு செல்லாமலே, அச்சூழலுக்கு ஏற்றவாறு மெய்நிகர் பயிற்சி அளிக்கப்படும். இந்த திறன்மிகு மையங்கள், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வையில் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுவரும் “நான் முதல்வன்” திட்ட நோக்கத்துடன் இணைந்து செயல்படும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தொழில்துறை, தொழில் துறை கூட்டமைப்பு, மருத்துவமனைகள் (மற்றும்) கல்வி நிறுவனங்களுடன் டான்செம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டது.
இதில் கற்பகம் குரூப், இந்துஸ்தான் குரூப் ஆப் இன்ஸ்டிடியூசன், ஸ்ரீ ராமச்சந்திரா, அமெட் உள்ளிட்ட நிறுவனங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டன. மேலும் பேப்ஹெட்ஸ், மேக்ஸ் பைட், பிரைமியம் ஆகிய நிறுவனங்களுடன் டாம்கோ புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. டிட்கோ நிறுவனமும், ஜி.டி.என். நிறுவனமும் இணைந்து பொது வசதி மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று மேற்கொள்ளப்பட்டது. வான்வெளி மற்றும் பாதுகாப்புத்துறையில், வெப்ப சிகிச்சை, மேற்பரப்பு பூச்சு மற்றும் வான்வெளி உபகரணங்களின் பிந்தைய செயலாக்கம் போன்றவற்றிற்கான வசதிகளை அமைக்க அதிகம் செலவாகும். இந்த பொது வசதி மையங்கள் அமைக்கப்படுவதன் மூலம், தொழிலகங்களுக்கான உற்பத்தி செலவினங்கள் வெகுவாக குறைக்கப்பட்டு, உற்பத்தித் திறன் பன்மடங்கு உயர்ந்திட வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் டிட்கோ நிறுவனம், ஒன்றிய அரசின் இந்திரா காந்தி ராஷ்ட்ரிய உடான் அகாடமி மற்றும் டி.இ. டிரோன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, மதுரை மற்றும் கோயம்புத்தூர் நகரங்களில் நிறுவியுள்ள ரிமோட் பைலட் பயிற்சி மையங்களை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
தமிழக அரசின் டிட்கோ நிறுவனம் மற்றும் ஒன்றிய அரசின், இந்திரா காந்தி ராஷ்ட்ரிய உடான் அகாடமி, டி.இ. டிரோன் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. சமீப காலங்களில், விவசாயம், சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளில் டிரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இப்பயிற்சி மையங்கள் மூலம் மாதம் 200 மாணவர்கள் என்ற விகிதத்தில் பயிற்சி பெறலாம். ஒரு வருடத்திற்குள் கிட்டத்தட்ட 2,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வாய்ப்பு உள்ளது.
இம்மாநாட்டில், அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், ஜி.இ. ஏவியேஷன் நிறுவனத்தின் தெற்காசிய தலைவர் சர்மிளா பரதன், சீமென்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மேத்யூ தாமஸ், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெயஸ்ரீ முரளி தரன், கிருஷ்ணமூர்த்தி, திட்ட இயக்குனர், தமிழக அரசின் மூத்த அதிகாரிகள், அயல்நாட்டு தூதரக அதிகாரிகள், தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தலைமைச் செயல் அலுவலர்கள், கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.