சென்னை: தமிழகத்தில் வாக்குப்பதிவு அன்று, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க கடைசி ஒருமணி நேரம் ஒதுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய , தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறுகையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வாக்காளர்கள் வாக்கு செலுத்த வரும்போது முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும், வாக்குச்சாவடி அதிகாரிகள், வாக்காளர்களுக்கும், தொற்று பரவாமல் இருக்க சானிடைசர் வழங்கப்படும் என்றவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும் வாக்களிக்கலாம் என்று கூறினார்.
வாக்குப்பதிவு நாளன்று, மாலை ஒரு மணி நேரம், கொரோனா நோயாளிகள் வாக்களிக்க ஒதுக்கப்படும் என்று கூறியவர், தொற்று பாதிப்பு உள்ளானவர்கள், பாதுகாப்பு கவச உடையுடன் வாக்களிக்கலாம் என கூறினார்.
சட்டமன்ற தேர்தலை கண்காணிக்க 4 சிறப்பு பார்வையாளர்கள் தமிழகம் வர இருப்பதாக தெரிவித்தவர், தமிழகம் முழுவதும் மார்ச் 3-ம் தேதி வரை ரூ.11 கோடி மதிப்பிலான பணம் பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.