சென்னை: ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவிக்கு வந்த, கடந்த 100 நாளில் 1 கோடி பேருக்கு  கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்து உள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க ஜனவரி 16ந்தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதலில் முன்களப்பணியாளர்களுக்கும், தொடர்ந்து 60வயதுக்கு மேற்பட்டோர், பின்னர் 15வயதுக்கு மேற்பட்டோர் என அதிகரிக்கப்பட்டு, தற்போது 18வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவிக்கு வந்ததும், தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேவையான தடுப்பூசிகளை கேட்டு மத்தியஅரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு, அதிக அளவிலான தடுப்பூசிகள் பெறப்பட்டு மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால், கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள பொதுமக்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும்,  கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்கியது முதல் இதுவரை 2 கோடியே 40 லட்சத்து 53 ஆயிரத்து 897 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

திமுக ஆட்சி பதவி ஏற்ற பிறகு,  கடந்த 100 நாட்களில்  1 கோடியே 10 லட்சத்து 9 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும்,  18-44 வயது பிரிவைச் சேர்ந்த நடுத்தர வயதினர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அதிக ஆர்வம் காட்டுவதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்து உள்ளது.

45-60 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 77 லட்சத்து 97 ஆயிரத்து 991 பேரும், 60 வயதுக்கும் மேற்பட்ட பிரிவில் 41 லட்சத்து 18 ஆயிரத்து 361 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

நேற்று ஒரே நாளில், 2 லட்சத்து 55 ஆயிரத்து 868 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 92 ஆயிரத்து 334 பேருக்கும், 12-ந் தேதி 1 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கும், 11-ந்தேதி 1 லட்சத்து 53 ஆயிரம் பேருக்கும், 10-ந்தேதி 2 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.