மும்பை: நாட்டிலேயே, 1 கோடிக்கும் அதிகமாக, கொரோனா தடுப்பு மருந்துகளை, பொதுமக்களுக்கு விநியோகித்த முதல் மாநிலம் என்ற நிலையை எட்டியுள்ளது மராட்டியம்.

இத்தகவலை, அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதுவரை, எந்த மாநிலமும் இந்த இலக்கை நெருங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 11ம் தேதி காலை வரை, 10,038,421 டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

தேசியளவில், தற்போது தடுப்பு மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், மராட்டிய மாநிலம் இதை நிகழ்த்தியுள்ளது. அதேசமயம், பற்றாக்குறை நீடிக்கும்பட்சத்தில், இதேவேகத்தில் தடுப்பு மருந்து விநியோகத்தை அம்மாநிலத்தால் மேற்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், மராட்டிய மாநிலத்திற்கு, தேவையான அளவில் தடுப்பு மருந்து விநியோகிப்பதில், மோடி அரசு பாரபட்சம் காட்டடுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள மத்திய அரசு வட்டாரங்கள், அனைத்து மாநிலங்களுக்கும் முறையான அளவில் மருந்து டோஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவை வரும் நாட்களில் சிறப்பாக விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.