கோயம்புத்தூரை சேர்ந்த யூனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன்ஸ் நிறுவனம் நடத்தியதாக கூறப்படும் பல மாநில பொன்சி மோசடி வழக்கில், சிபிஐ விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சுமார் 73,000 முதலீட்டாளர்கள், ₹1000 கோடிக்கும் அதிக தொகையை இழந்துள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் தாக்கல் செய்த மனுவை, தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி அடங்கிய அமர்வு விசாரித்தது.

மனுதாரர்கள் தரப்பில், இந்த மோசடி பல மாநிலங்களை சேர்ந்த நிதி ஏமாற்று என்பதால், BUDS சட்டம் படி சிபிஐ தான் விசாரணை நடத்த வேண்டும். ஆனால் தற்போது தமிழ்நாடு போலீசின் பொருளாதார குற்றப்பிரிவு (EoW) விசாரிப்பது சட்டத்திற்கு எதிரானது என வாதிடப்பட்டது.
யூனிவர்சல் டிரேடிங் நிறுவனம், ஆண்டுக்கு 12% வட்டி, முதலீட்டு தொகையில் மாதம் 10% திருப்பி தரப்படும் என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்து ஏராளமான பணத்தை முதலீடாகப் பெற்றது.
பின்னர், அந்தப் பணத்தில் நிலம் உள்ளிட்ட அசையா சொத்துக்களை வாங்கிக் குவித்த அந்நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றியது.
இதுதொடர்பாக, 2019ல் கோயம்புத்தூரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இடையில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் கேரள உயர்நீதிமன்றம் சில உத்தரவுகள் வழங்கின. கேரளா அரசு சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல் அளித்தது.
2023ல் உச்ச நீதிமன்றம், சொத்துகளை விற்று முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்க முன்னாள் நீதிபதி எம். கோவிந்தராஜ் தலைமையில் குழு அமைத்தது. ஆனால் இதுவரை ஏலம் நடத்தப்படவில்லை, பணமும் வழங்கப்படவில்லை என முதலீட்டாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனால், தமிழ்நாடு போலீஸ் விசாரணையை ரத்து செய்து, வழக்கை முழுமையாக சிபிஐக்கு மாற்ற வேண்டும் என அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
[youtube-feed feed=1]