art of living
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் உலக கலாசார விழா:
பல நாட்டுத் தலைவர்களின் பங்கேற்பு கடைசி நேரத்தில் ரத்து!

புதுடெல்லி
வாழும் கலை அமைப்பின் சர்ச்சைக்குரிய உலக கலாசார விழா டெல்லியில் இன்று வெள்ளிக்கிழமை 10 ஆம் தேதி  தொடங்கி 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் உலகத்தின் பல்வேறு நாட்டு அதிபர்கள், பிரதமர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் பல நாட்டுத் தலைவர்களும் தங்கள் வருகையை ரத்து செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு, டெல்லி- யமுனை நதி வெள்ள சமவெளிப்பகுதியை சேதப்படுத்தி   உலக கலாசார விழாவினை இன்று முதல் (மார்ச் 10-13)  மூன்று நாட்களுக்கு நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் 35 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விழா நடைபெறும் இடம்  பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். யமுனை நதியின் சுற்றுச் சூழலை இந்த விழா சீர்குலைக்கும் என்பதால் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வாழும் கலை அமைப்புக்கு ரூ. 5 கோடி அபராதம் விதித்துள்ளது. ஆனால் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்  1 ரூபாய் கூட அபராதம் செலுத்தப்போவதில்லை. சிறை செல்லவும் தயார் என ஆவேசமாகத்  தெரிவித்திருந்தார்.
இப்படி பல சர்ச்சைகளை உள்ளடக்கிய இவ்விழாவில் உலகத் தலைவர்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அவர்களில் ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன, நேபாள  ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி, முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி, முன்னாள் பிரஞ்சு பிரதமர் வில்ப்பன்  ஆகியோர் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வார்கள் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த்து. ஆனால் கடைசி நேரத்தில் அவர்களின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்தியாவில் உள்ள  அவர்களின் சம்பந்தப்பட்ட தூதரகங்கள் உறுதிப்படுத்தி உள்ளன. அதேவேளை,  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இவ்விழாவில் கலந்து கொள்வார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலகத் தலைவர்களின் கடைசி நேர பயண ரத்து வாழும் கலை அமைப்பினரிடையே ஏமாற்றத்தையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.