சென்னை
சென்னை பெசண்ட் நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவில் கழிப்பறை வசதிகள் குறைவாக உள்ளதாகப் புகார்கள் தெரிவிக்கின்றன.
சென்னை அடையாறு பகுதியில் உள்ள பெசண்ட் நகரில் வேளாங்கண்ணி மாதா கோவில் அமைந்துள்ளது. நேற்று முதல் இந்தக் கோவிலில் 11 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிறது. இது மேரி மாதா கோவில் என்றாலும் இந்துக்கள், கிறித்துவர்கள் என மத வித்தியாசம் இன்றி இங்குப் பக்தர்கள் வந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர். கடற்கரை ஓரம் அமைந்துள்ள இந்தக் கோவிலுக்கு நேற்று சுமார் 2 லட்சம் பேர் வந்திருந்தனர்.
இந்த பகுதியில் சென்னை மாநகராட்சி சார்பில் ஒரு வசதியும் செய்யப்படவில்லை என மக்கள் குறை கூறுகின்றனர். அதில் முதலாவதாக குடிநீர் வசதி இல்லாததால் பலரும் தவித்து வருகின்றனர் இங்குள்ள கடைகளில் கூட்டம் அதிகரித்ததால் விலையும் அதிகமாகி உள்ளது. ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் ரூ.50 என விற்கப்படுகிறது.
அடுத்ததாக கழிப்பறை வசதிகள் மிகவும் மோசமாக உள்ளதாகப் பலர் குறை கூறுகின்றனர். இங்குள்ள ஒரு உணவகத்தின் எதிரே ஒரு கழிப்பறை வளாகம் உள்ளது. அங்கு 8 கழிப்பறைகள் உள்ளன. ஒவ்வொருவரும் இதற்காக 20 நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஐலும் நேற்று மாலை 4 மணிக்கு தண்ணீர் தீர்ந்து விட்டதால் அதையும் பயன்படுத்த இயலாத நிலை உண்டாகி விட்டது.
இந்தப் பகுதியில் மேலும் இரு கழிப்பறை வளாகங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று கடற்கரையிலும் மற்றொன்று கோவில் நுழைவாயில் அருகிலும் உள்ளன. கடற்கரையில் உள்ள கழிப்பறையில் தண்ணீர் கிடையாது. எனவே அதை யாரும் உபயோகிக்க இயலாது. கோவில் அருகே உள்ள கழிப்பறையை காவல்துறையினர் பாதுகாப்பு காரணமாக மூடி வைத்துள்ளனர். பலர் கடற்கரையைத் திறந்த வெளி கழிப்பறையாக்கி விட்டனர்.