Vedhalam-and-Thoongavanam-Release-date-confirmed

 

வீட்டுக்குப் போற வழியில திடும்னு வண்டி நின்னு போச்சு. (மழை பெஞ்சா இப்படித்தான்.. ஒரு இனோவா வாங்கிக்கொடுங்கன்னா ஆபீஸ்ல கேட்டாத்தானே!)

வண்டிய ஓரங்கட்டிட்டு, என்ன செய்யலாம்னு யோசிச்சிக்கிட்டிருந்தப்பதான் பார்த்தேன்… பக்கத்தில தள்ளுவண்டியில வச்சு டிவிடி வித்துகிட்டிருந்தாரு ஒருத்தரு. சரி, அவரு சேல்ஸை பாப்போம்னு, அப்பாவி மாதிரி முகத்த வச்சுகிட்டு நின்னேன்.

அப்போ வந்த ஒருத்தரு, தள்ளுவண்டிகாரருகிட்ட, “வேதாளம், தூங்காவனம் இருக்கா”னு கேட்டாரு. அவர முறைச்ச தள்ளுவண்டிக்காரரு, “இல்லே இல்லே.. கிளம்பு”ன்னு வெரட்டினாரு.

“ஓ.. திருட்டு டிவிடி விக்கறவங்கள்லேய இருவ நல்லவரு போலிருக்கு… படம் வந்து நாலு நாள்தானே ஆச்சு…   ரெண்டு வாரம் கழிச்சுத்தான் விப்பாரு போல”னு நெனச்சுக்கிட்டேன்.

அப்போ இன்னொருத்தவர் வந்து, “டீ வந்துருச்சா”னு கடைக்காரர கேட்டாரு. ஏற்கெனவே பழக்கம் போல. “வந்துருச்சு”ன்னு சிரிச்சிகிட்டே சொன்ன கடைக்காரரு, “வியும் இருக்கு”ன்னாரு.

வந்தவரு பணத்தை நீட்ட.. இவரு ரெண்டு டிவிடிய பேப்பர்ல சுத்தி கொடுக்க.. ஓ… தூங்காவனம், வேதாளம் திருட்டு டி.வி.டிங்கனு அப்பத்தான் என் சின்ன மண்டைக்கு புரிஞ்சிச்சு.

அதுக்கப்புறம் நெறைய பேரு, கோட்வேர்ட் சொல்லி வாங்கிட்டுபோனாங்க.

கடைக்காரருகிட்ட மெல்ல போயி, நானும் கோட்வேர்ட்(!) சொல்லி கேட்டேன். புரியாம பாத்தாரு.. “வழக்கமா உங்க பிரதர்தானே இருப்பாரு”ன்னேன். அவரும் சிரிச்சிகிட்டே, “ஓ.. தம்பி கஸ்டமரா! தீபாவளிக்கு ஊருக்குப்போனவன் இன்னும் வரலை”னு  ரெண்டு டிவிடியை எடுத்து கொடுத்தாரு. (ஆகா! எப்படி எல்லாம் யோசிச்சு மேட்டர் புடிக்கிறேன்!)

“கோட் வேர்ட் வச்சுத்தான் புதுப்படங்கள விப்பீங்களா”னு கேட்டேன். அவரும், “என்னங்க செய்யறது மாமூல் எல்லாம் சரியாத்தான் கட்டறோம். ஆனாலும் ஜாக்கிரதையா இருக்கணும்… சினிமாக்காரங்களே சிலபேரு நம்ம(!) டிவிடிகளை புடிக்க கிளம்பியிருக்காங்களாமே..” என்றார்.

அவர்கிட்ட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருந்தேன். படம் வெளியான (தீபாவளிக்கு) மறுநாளே இந்த டி.வி.டிங்க வந்துருச்சாம். இந்த சேல்ஸ்ல தூங்காவனம்தான் டாப்பாம். வேதாளம் அடுத்த இடம்தானாம்.

“நியாயமான விலைதாங்க… நாப்பதே ரூபா”னு சொன்னாரு. தி.நகர் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில, பாரீஸ் ஹை கோர்ட் எதுத்தாப்ல, போரூர் சிக்னல் கிட்ட.. இப்படி நிறைய இடம் சொன்னாரு… அங்கெல்லாம் திருட்டு டிவிடி சக்கைபோடு போடுதாம்!

“இதெல்லாம் தப்பில்லீங்களா…”னு கேட்டேன். வந்துச்சே பாருங்க அவருக்கு கோபம்.. “ஏம்பா.. விவரம் தெரியாம பேசறியே. தியேட்டர்ல டிக்கெட் விலையை தாறுமாறா ஏத்தி ஐநூறு ஆயிரம்னு விக்கிறான். வரிவிலக்கு கொடுத்தாலும், டிக்கெட் விலையை குறைக்கிறதில்லே… உள்ளே வாட்டர் கேனு, திண்பண்டம்னு எதை எடுத்தாலும் நாலு பங்கு விலை.. இதெல்லாம் முடியாமத்தானே ஏழை பாழைங்க எங்ககிட்ட வர்றாங்க.. இது சர்வீஸ்யா..”னு சீரியஸா சொன்னாரு.

ஆச்சரியமாத்தான் இருந்துச்சு.. திருட்டு டிவிடிங்க இம்புட்டு வித்தே 100 கோடி வசூல்.. 150 கோடி வசூல்னு அலப்பற பண்றாங்களே.. இந்த திருட்டு டிவிடியும் இல்லேன்னா படம் எல்லாம் 500 கோடி 1000 கோடின்னு வசூல் ஆகுமோ!

கண்ணகட்டிடுச்சு எனக்கு!

 – ரவுண்ட்ஸ்பாய்