drainage

 

தமிழகத்தின் பல பகுதிகளில்.. குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் ஏற்பட்ட வெள்ளம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, மழை மீது தவறில்லை. மழை நீரை சேமிக்க வேண்டிய ஏரி, குளங்களை அதிகாரவர்க்கத்துடன் ஆக்கிரமித்ததும், நீர் பிடிப்பு ஆதாரங்களை தூர்வாருவது, வடிகால் வசதி, சாலைகளை அமைப்பதில் நடந்த ஊழலும்தான் வெள்ளத்துக்கு காரணம் என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

இந்த ஊழல் மற்றும் அக்கறை இன்மை பற்றி விவரங்களை திரட்ட ஆரம்பித்தோம்.

 

1

சென்னை பகுதியில் பணியாற்றும் சில அலுவலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளை சந்தித்து பேசினோம். அவர்கள் கூறிய விவரங்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குபவையாக இருக்கின்றன.

அவற்ற வசகர்களின் பார்வைக்கு வைக்கிறோம்.

தமிழகம் முழுவதும் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகள் பெரும்பாலும், இந்த மழையால் சிதைவடைந்துள்ளது.

இதற்குக் காரணம், சாலை போட்ட காண்டிராக்டர்கள், விதிமுறைகளை மதிக்காததுதான்!
காண்டிராக்டர்கள் மூலம், மாநிலம் முழுவதும், நெடுஞ்சாலை பணிகள் நடக்கும். 1992க்கு முன் வரை, நெடுஞ்சாலைத் துறையின் உத்தரவுகளை பின்பற்றி, ஒப்பந்ததாரர்கள் சாலை போட்டார்கள். இந்த வேலைகளுக்கான தார், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும். மாநிலம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர்கள், தார் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், 1993ல்,  அ.தி.மு.க. ஆட்சியில், ‘சாலை போடுவதற்குத் தேவையான தாரை, ஒப்பந்ததாரர் எங்கு வேண்டுமானாலும் கொள்முதல் செய்து கொள்ளலாம்” என தமிழக அரசு உத்தரவிட்டது. இதுதான் தரம் குறைய முக்கிய காரணம். அதன் பிறகுதான் தரமான தார் பயன்படுத்துவது குறைந்துபோனது. ஆகவே சாலையின் தரமும் குறைந்தது.

இது மட்டுமல்ல. சாலை எப்படி அமைக்கப்பட வேண்டும் என்று இந்திய சாலை குழுமம் வகுத்துள்ளது. சாலையில் உள்ள வாகன போக்குவரத்து, வாகனங்களின் எடை, சாலைக்கு அடியில் உள்ள மண்ணின் தன்மை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, சாலைகள் உருவாக்க வேண்டும். ஆனஆல் இந்த விதிமுறைகளை பெரும்பாலான ஒப்பந்ததாரர்கள் கடைபிடிப்பதில்லை. அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. காரணம், லஞ்சம்தான்” என்றார் நாம் சந்தித்த பெயர் சொல்ல விரும்பாத அந்த அதிகாரி.

“கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளே காசு வாங்கிக்கொண்டு கண்டுகொள்ளாமல் இருக்கும்போது, தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள் கமிசனுக்காக இதை எதிர்க்காத போது, மக்கள்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சாலை போடும்போது அது தரமானதாக அமைக்கப்படவில்லை என்றால், மக்கள் போராட வேண்டும்” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

(தொடரும்…)