குணா
குணா

த்திய அரசின் மத போக்கை எதிர்த்து எழுத்தாளர்கள் போர்க்கொடி தூக்க வேண்டும். தாங்கள் வாங்கிய அரசு விருதகளை திருப்பி அளிக்க வேண்டும்” என்று சிலர் ஓங்கிக் குரல் எழுப்பத் துவங்கியருக்கிறார்கள்.

இந்த நிலையில், “சாதி வெறியை எதிர்த்து சமூக நோக்குடன் நாவல் எழுதியதற்காக எனக்குக் கிடைத்த விருதைத் திருப்பித்தர தயார்” என்கிறார் எழுத்தாளர் துரை. குணா.

புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி வட்டம் குளந்திரான்பட்டு கிராமத்தைச் சார்ந்த  தலித் இளைஞரான குணா,  கடந்த வருடம், ‘ஊரார் வரைந்த ஒவியம்” என்ற தலைப்பில் நாவல் ஒன்றை எழுதினார்.

அந்த புத்தகம்
அந்த புத்தகம்

சாதிவெறி குறித்து தனது நாவலில் பதிவு செய்தார். இதனால் அவரது ஊரைச் சேர்ந்த சிலர் நாவலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

அதன் பிறகு நடந்ததை துரை.குணாவே சொல்கிறார்:

“நாவலை வெளியிட்ட பிறகு, தொடர்ந்து ஆதிக்க சாதியினரால் எனக்கு அச்சுறுத்தல் வந்தது. காவல் துறையிடம் புகார் அளித்தேன். ஆனால் ஆதிக்க சாதியினர் ஊரில் இருக்கும் தலித் குடும்பங்களை மிரட்டி, அவர்களையே எனக்கு எதிராக செயல்பட வைத்தார்கள். ஏனென்றால் ஆதிக்க சாதியினரை நம்பித்தான் தலித் மக்களின் வேலை வாய்ப்பு, வாழ்க்கை இருக்கிறது. மேலும் தலித் சமுதாயத்தினர் ஒருவரே என் மீதும் என் வயதான தாய் தந்தை மற்றும் மனைவி மீதும் காவல் துறையில் பொய்ப்புகார் கொடுத்தார்கள்.

கடந்த வருடம் ஜூன் மாதம் நூலை வெளியிட்டேன். அதிலிருந்து எனக்கு கிடைக்கும் விருதுகள் இவைதான். இன்னும் அச்சுறுத்தல் ஓய்ந்தபாடில்லை.

என் மீதான பொய்ப்புகார் மீதான வழக்கில் ஆஜராகுமாறு கடந்த எட்டாம் தேதி கோர்ட்டில் இருந்து அழைப்பு வந்தது. குடும்பத்துடன் ஆஜரானோம். அப்போதுதான், என்னை தலைமறைவு குற்றவாளி என்று காவல்துறை பதிவு செய்திருப்பது தெரிந்தது. நான் அதிர்ந்து போனேன்.

ஏற்கெனவே ஊரில் வாழ முடியாமல் பக்கத்து ஊரில் வசிக்கிறேன். நான் திருப்பூரில் பார்த்து வந்த வேலைக்கும் இப்போது போக முடியவில்லை. ஏனென்றால் தொடர்ந்து அச்சுறுத்தல் மன உளைச்சல். இடையே வழக்கு விவகாரங்கள் வேறு.

நீதிமன்றத்தில் குடும்பத்துடன்..
நீதிமன்றத்தில் குடும்பத்துடன்..

ஆகவே மிகுந்த வறிய நிலையில் வழக்கை எதிர்கொண்டு வாழ்ந்து வருகிறேன். வழக்கு செலவுக்குக் கூட நண்பர்கள் சிலர்தான் தங்களால் முடிந்த பண உதவியை செய்கிறார்கள்.

இந்த வழக்கில் எங்களுக்கு ஜாமீன் வழங்க ஆளுக்கு தலா இரண்டு பேர் என்று எட்டு பேர் வேண்டும்.  அதற்குக் கூட வழியின்றி தவிக்கிறேன்.

வேலைக்கும் செல்லமுடியாமல், பாதுகாப்பும் இல்லாமல், வழக்கை நடத்த பணமும் இல்லாமல் மிகத் துயர நிலையில் இருக்கிறேன். இதுதான் நல்ல நோக்கத்துடன் எழுதிய என் நாவலுக்கு தமிழ்ச் சமூகம் அளித்திருக்கும் விருதுகள். இந்த விருதுகளை திரும்பத் தர தயாராக இருக்கிறேன். யாரிடம் திரும்பக் கொடுப்பது?”  – விரக்தி புன்னகையுடன் கேட்கிறார் துரை.குணா.

கேள்விக்கு யார் பதில் சொல்வது?

  • சுந்தரம்