vijayakanth-and-premalatha-

வேலூர்:

“சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் தலைமையில் ஒரு கூட்டணி அமையும். அந்த கூட்டணிதான் வெற்றி பெறும். விஜயகாந்த் தலைமையில்தான் புதிய ஆட்சி அமையும்” என்று தே.மு.தி.க., மகளிர் அணி தலைவி பிரேமலதா கூறியுள்ளார்.

வேலுார் மாவட்ட, தே.மு.தி.க., சார்பில், நரிக்குறவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா, திருப்பத்துாரில் நடைபெற்றது. விஜயகாந்த் தலைமை வகித்த இந்தக் கூட்டத்தில் பிரேமலதா பேசியதாவது:

“சமீபத்தில், தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக, ஒரு கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. அதில், அடுத்த முதல்வராக, ஜெயலலிதாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும்; அதற்கு அடுத்ததாக ஸ்டாலின், கருணாநிதிக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.  விஜயகாந்துக்கு வெறும், 6 சதவீதம் தான் வாய்ப்பு என்றும் கூறியிருக்கிறார்கள். இதற்காக, யாரிடம் சூட்கேஸ் வாங்கினார்களோ தெரியவில்லை.

2006 தேர்தலில், நாங்கள் தனித்து போட்டியிட்டு, 8.23 சதவீத ஓட்டுகளைப் பெற்றோம். பிறகு, 10 சதவீத ஒட்டுக்களை பெற்றிருக்கிறோம். ஆனால் இப்போது எங்களுக்கு நான்கு சதவீத ஓட்டு தான் இருக்கிறத என  அந்த கருத்து கணிப்பில் கூறியிருக்கிறார்கள்.

சட்டசபை தேர்தலுக்கு, விஜயகாந்த் தலைமையில் ஒரு கூட்டணி அமையும். அந்த அணிதான் வெற்றி பெறும். விஜயகாந்த் தலைமையில், புதிய ஆட்சி அமையும். விஜயகாந்த்தான்  அடுத்த முதல்வர்!

தி.மு.க., ஆரம்பித்த திட்டங்களையெல்லாம், அ.தி.மு.க., அரசு மூடிவிட்டது. ஆனால், ‘டாஸ்மாக்’கை மட்டும் மூடவில்லை.

பெண்களின் தாலிக்கு தங்கம் கொடுக்கும் அதிமுக அரசுதான் டாஸ்மாக்கை திறந்து வைத்து அதே தாலியை பறிக்கிறது. கொடநாடு செல்லும் வழியில் உள்ள ஒரு பள்ளியை மூடிவிட்டு, அதில், வெளிநாட்டு உயர்ரக மதுக்கடையை திறந்திருக்கிறார்கள்.”

  • இவ்வாறு பிரேமலதா பேசினார்.