27-1456573314-evks-elangovan-11-6600
சென்னை:
ஜெயலலிதாவை  தோற்கடிக்க நினைத்து விஜயகாந்த் எங்கள் கூட்டணிக்கு வர விரும்பினால் கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்து  அது பற்றி முடிவெடுப்போம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருக்கிறார்.
உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். பிறகு கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்தார்.  பெண் தொண்டர்கள் அவருக்கு  ஆரத்தி எடுத்து பூசணிக்காய் உடைத்து வரவேற்பு கொடுத்தனர்.  கட்சியினரை சந்தித்த பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
“தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.  மூன்று நான்கு அமைச்சர்களை வீட்டுக் காவலில் வைக்கும்படி  முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இது போன்ற செய்திகள் கடந்த இரு நாட்களாக பரவி வருகிறது.  இது குறித்து ஜெயலலிதா தான் விளக்கம் அளிக்க வேண்டும்.
காங்கிரஸ்-திமுக கூட்டணி உறுதியாகிவிட்டது. இதனை திமுக தலைவர் கருணாநிதி மற்றும் காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் ஒப்புக் கொண்டுள்ளனர். இன்னும் இரண்டு மூன்று  நாட்களில் தொகுதி பங்கீடு குறித்த  பேச்சுவார்த்தை துவங்கும்.
கூட்டணிக்கு வருமாறு விஜயகாந்தை அழைத்தோம். ஆனால் அவர் வராததால் விட்டுவிட்டோம். அதே சமயம் ஜெயலலிதாவை எதிர்க்க, தோற்கடிக்க நினைத்து விஜயகாந்த் எங்கள் கூட்டணிக்கு வர விரும்பினால் கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுப்போம்.
ஜெயலலிதாவை தோற்கடிக்கத் தேவைப்படும் பலம் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு உள்ளது. எங்கள் கூட்டணி வலுவான கூட்டணி.  வரும் சட்டசபை தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று ஜெயலலிதாவை வீட்டிற்கு அனுப்பி வைப்போம். முடிந்தால் சிறைக்கும் அனுப்பி வைப்போம்.
மக்கள் நலக் கூட்டணி வலுவாக உள்ளது என்று அதன் தலைவர்கள் கூறிக்கொள்வது காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போலத்தான்.  வைகோ பேசிய எதுவும் நடந்ததாக சரித்திரமே கிடையாது கடந்த முப்பது  ஆண்டுகளில் அவர் என்ன பேசுகிறாரோ அதற்கு எதிராகத்தான் நடந்திருக்கிறது” – இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசினார்.