download
தேர்தல் வந்துவிட்டாலே வித்தியாசமான முறையில் பிரச்சாரங்கள் மேற்கொள்வது வழக்கம்தான். ஆனால் வரும் தேர்தலில் மிக வித்தியாசமான ஒரு பிரச்சாரம் நடக்கப்போகிறது.
பொது சொத்து ஆக்கிரமிப்பு, மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி வரும் “தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி”தான் இந்த வித்தியாசமான பிரச்சாரத்தை செய்யப்போகிறது.
அக்கட்சியின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. மாநில தலைவர் பூமொழி,  பொதுச் செயலாளர் மதியழகன், பொருளாளர் கோபி கண்ணன் உட்பட நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.
316424_103630173079855_1178619212_n
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து நம்மிடம் பேசினார், மாநில தலைவர் பூமொழி:
“தேர்தலில் போட்டியிடும் கட்சிகளும் ஆதரவு அமைப்புகளும், தங்கள் கட்சிக்கு ஓட்டளிக்கும்படி பிரச்சாரம் செய்வார்கள். அதே நேரம் எதிர்க்கட்சி பற்றி அவதூறு பரப்புவார்கள். ஒரு சில அமைப்புகள் பொதுவாக தேர்தலை எதிர்த்து பிரச்சாரம் செய்வதும் உண்டு.
ஆனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் வித்தியாசமான முறையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்போகிறோம். ஒவ்வொரு தொகுதியிலும் முக்கிய கட்சிகள் வேட்பாளர்கள் அறிவித்த   பிறகு, அந்த தொகுதியில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளர்கள் பற்றிய முழு தகவல்களையும் திரட்டுவோம். அவர்களது கடந்தகால செயல்பாடுகளை ஆராய்வோம். குற்றப்பின்னணி, ஊழல், லஞ்ச புகார்கள் குறித்து அனைத்து தகவல்களையும் திரட்டி, மக்களிடையே அம்பலப்படுத்துவோம்.
குறிப்பாக வேட்பாளர் தனது உண்மையான சொத்து மதிப்பை வெளிப்டுத்தி இருக்கிறாரா என்பதையும் ஆராய்ந்து மக்களுக்கு சொல்வோம். ஏனென்றால் பல வேட்பாளர்கள் தங்கள் சொத்து மதிப்பை  குறைத்தே தகவல் தருகிறார்கள். அதை தடுக்கவே இந்த ஏற்பாடு.
மொத்தத்தில் கிரிமினல் வேட்பாளர்களுக்கு எதிராக எங்கள் பிரச்சாரம் இருக்கும். இதில் கட்சி பேதமே எங்களுக்கு கிடையாது” என்ற பூமொழி,  “சுருக்கமாகச் சொன்னால், எல்லா கட்சிகளுக்கும் எதிர்க்கட்சியாக செயல்படப்போகிறோம்” என்றார்.
“புதிய முயற்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் நல்ல வேட்பாளர்கள் போட்டியிட்டால்…” என்று கேட்டோம்.
“தப்பித்தவறி அப்படி யாரேனும் போட்டியிட்டால் அவர்கள் செய்த நல்லதையும் மக்களிடையே சொல்வோம். தொகுதியில் நல்ல வேட்பாளர்கள் யாருமே போட்டியிடாவிட்டால், நோட்டோவுக்கு வாக்களியுங்கள் என்பதையும் வலியுறுத்துவோம்” என்றார்.
பரஸ்பரம் கட்சிகளுக்கிடையே குற்றச்சாட்டுகளை வீசுவது உண்டு, ஆனால் எல்லா கட்சிகளையும், வேட்பாளர்களையும் விமர்சித்து பிரச்சாரம் செய்வது வித்தியாசமான பிரச்சாரம்தான்!