ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில் லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்ட சுங்கத்துறை அதிகாரி, ரூ.100 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததும், வட்டிக்கு விட்டு பணம் சம்பாதித்ததும் தெரியவந்துள்ளது
கடந்த 1989-ம் ஆண்டு சுங்கத்துறை மதிப்பீட்டாளராக பணியில் சேர்ந்த ஷாஹி ராம் மீனா என்பவர், 1997-ம் ஆண்டு ஐஆர்எஸ் அதிகாரியானார்.
இவர் வருவாயை மீறி ரூ.100 கோடி அளவுக்கு சொத்து சேர்த்தாக ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் அவர் கடந்த 26-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, மீனாவின் 100 வீட்டு மனைகளுக்கான ஆவணங்கள், கனரக வாகனங்கள் வைத்திருப்பதற்கான ஆவணங்கள், பெட்ரோல் பங்குகள் வைத்திருப்பதற்கான ஆவணங்கள்,பண்ணை வீடுகள் வைத்திருப்பதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. பணமாக மட்டும் ரூ.2.26 கோடி கைப்பற்றப்பட்டது.
அவர் அலுவலகத்தில் குடியரசு தினவிழாவை கொண்டாடிய அன்று, ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக அவரைப் பிடித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
அவரது டைரியை கைப்பற்றிப் பார்த்தபோது, அவர் வாங்கிய லஞ்ச விவரத்தை பட்டியல் போட்டு எழுதி வைத்திருந்தார். மேலும் லஞ்சப் பணத்தை வட்டிக்கு விட்டு சம்பாதித்ததும் தெரியவந்தது என்று போலீஸார் தெரிவித்தனர்.