டில்லி

லக அளவில் ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகளில் இந்தியா 3ஆம் இடத்தில் உள்ளது.

தற்போது நடைபெற்று வரும் மழைக்கால நாடாளுமன்றத் தொடரில் மக்களவையில் ஒரு உறுப்பினர் ராணுவத்துக்கான செலவுகள் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.  அதற்குப் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய்பட் எழுத்துப் பூர்வமாகப் பதில் அளித்துள்ளார்.

அந்த பதிலில் அமைச்சர்,

“ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (எஸ்ஐபிஆர்ஐ) இணையதளத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி கடந்த 2021-ம் ஆண்டில் உலக நாடுகளின் ராணுவ செலவினங்கள் பட்டியலிடப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் ராணுவ செலவு ரூ.63.4 லட்சம் கோடியாகவும் சீனாவின் ராணுவ செலவு ரூ.23.23 லட்சம் கோடியாகவும் உள்ளது. அடுத்து மூன்றாவதாக இந்தியாவின் ராணுவ செலவு ரூ.6.06 லட்சம் கோடியாக உள்ளது. உலக அளவில் ராணுவத்துக்குச் செலவு செய்வதில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

இதில் கடந்த 2017-21-ம் ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து 33.97% முதல் 41.60% அளவுக்கு ராணுவத் தளவாடங்கள், ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் இந்திய பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையான ஆயுதங்கள், தளவாடங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.”

எனத் தெரிவித்துள்ளார்.