z

ராஜேந்தர் தலைமறைவான சம்பவம் பற்றி எழுதியதற்கு ஏக ரெஸ்பான்ஸ்.  இன்று போன் செய்த கொக்கு சாரிடம் இதை சொன்னேன். “அப்படியா.. இதோ இன்னொரு சம்பவம் சொல்றேன்.. அதையும் எழுது. இப்போ ரொம்ப பொருத்தமா இருக்கும்” என்றார் உற்சாகமாக.

கொக்கு சார் சொன்ன சம்பவம் இதுதான்:

டி.ராஜேந்தர் படம் ஒன்று தயாராகிக்கொண்டிருந்த நேரம்.  சிறுவனான சிம்புக்கு முக்கியவேடம். “எங்க வீட்டு வேலன்” என்று நினைவு.

சென்னை தி.நகர் இந்தி பிரச்சார சபா அருகில் இருக்கும் தனது வீட்டில், அடுத்த நாள் நடக்க இருக்கும் படப்பிடிப்பு குறித்து தாடியை சொறிந்தவாறு யோசித்துக்கொண்டிருந்தார் டி.ராஜேந்தர். அந்த காட்சிக்கு யானை வேண்டும் என்பது நினைவுக்கு வந்தது. உடனே தனது புரடக்சன் மேனேஜர் அழைத்தார் அழைத்தார். தகவலைச் சொன்னார். மதி எப்போதுமே சுறு சுறு பார்ட்டி.

அங்கே இங்கே அலைந்தவர், அன்று மாலையே யானைப் பாகன் ஒருவனை டி. ஆர் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார். யானைப் பாகனோடு யானையும் வந்தது.

தகவல் செல்ல.. வீட்டிலிருந்து வெளியே வந்தார் டி.ஆர். “படத்தில் நடிக்க யானைக்கு எவ்வளவு பணம்” என்ரு பாகனிடம் கேட்டார்.

இந்த இடத்தில் ஒரு தகவல். பண விவகாரம் குறித்து டி.ஆர். பேசினாலும், இறுதி முடிவு அவரது மனைவி உஷாதான். தவிர இருவருமே சிக்க்க்க்க்க்க்க்கனமானவர்கள்.

இப்போது மேலே படியுங்கள்.

தனது யானைக்கு நடிக்க எவ்வளவு பணம் என்று கேட்டவுடன், பாகனுக்கு உற்சாகம் தொற்றிக்கொண்டது. “ஆயிரம் ரூபாய்” என்றார். அது மிகக் குறைச்சலான தொகைதான். சினிமாவில் தனது யானை நடிக்கப்போகிறதே என்ற மகிழ்ச்சியில் அப்படி குறைத்து கேட்டார்.

ஆனால் டி.ராஜேந்தர் “அதெல்லாம் முடியாது ஐம்பது ரூபாய் தருகிறேன்..” என்றார்.

பாகன் அந்த தொகைக்கு மறுத்தான். டென்சன் ஆன டி.ஆர், “டேய்.. அஞ்சு காசு பத்து காசு பிச்சை எடுக்கிற யானை தானடா.. ஐம்பது ரூபா பத்தாதா” என்று கத்த… பாகனுக்கு கோபம் வந்துவிட்டது.

டி.ராஜேந்தரின் வீட்டுக்கு வெளியே ஓரமாக நின்று கொண்டிருந்த தனது யானைக்கு ஏதோ உத்தரவு போட்டான். டி.ஆர். வீட்டு வாசலில் குறுக்காக படுத்தது யானை. அவன் மட்டும் கிளம்பிவிட்டான்.

டி.ஆர். வீட்டுக்குள்ளிருந்து வெளியே வரமுடியவில்லை. அவர் மட்டுமா.. அவர் வீட்டிலிருந்த யாரும்தான். வீட்டு வாசலில் மறியல் செய்வது போல  யானை படுத்துவிட்டது. இதைப்  பார்த்து கூட்டமும் கூடிவிட்டது. கூடியிருந்தவர்கள் சத்தம் போட்டும் யானை அசைவதாயில்லை. முன்னதாக டி.ஆர் கத்தியே அசையாத யானை, கூட்டத்தினர் சத்தத்துக்கா மசியும்? வளர்ப்பு யானைகள், பாகனுக்கு மட்டுமே கட்டுப்படும்.

பதறிப்போன டி.ஆர்., போலீஸுக்கு போன் போட்டார். போலீசாரும் வந்தார்கள். என்ன பியோஜனம்? அரசியல்வாதி மாதிரி, போலீசாரை எகத்தாளமாய் பார்த்தபடி, படுத்தே கிடந்தது.

போலீசாரும், தொப்பியைக் கழற்றி, தலையை தடவியபடி நின்றார்கள்.

அவர்களும் என்னதான் செய்வார்கள்?

பிறகு, போலீசாரில் ஒருவர், புத்திசாலித்தனமாக “வனத்துறை ஆட்களை கூப்பிடலாம்” என்று சொல்ல… அதன்படி வனத்துறைக்கு தகவல் போனது.

அவர்களோ, “சென்னை அலுவலகத்தில் நிர்வாக அதிகாரிகள்தான் இருப்பார்கள்.. பாகனுக்கு வேலை இல்லை. ஏதாவது கோயிலுக்கு போய் அங்கிருக்கும் யானைப்பாகனிடம் பேசுங்கள்” என்று சொல்லிவிட்டார்கள்.

ராமண்ணா
ராமண்ணா

போலீசாருக்கு, தலையில் இடி விழுந்த மாதிரி இருந்தது. டி.ராஜேந்தருக்கோ தலையில் இரண்டு இடி. ஆமாம், அவரது மனைவி உஷா, “ஒரு பாகன் கிட்ட பேசி ஒத்துக்கவைக்கத் தெரியல.. நீ எல்லாம்..” என்று டி.ஆரை திட்டிக்கொண்டிருந்தார். (பலரது எதிரிலும் தனது கணவரை திட்டும் அளவுக்கு உஷா வெள்ளந்தியானவர்.. பலரது எதிரில் மனைவி தன்னை திட்டினாலும் எதிர்த்து பேசாத அளவுக்கு டி.ராஜேந்தர் வெள்ளந்தியானவர்.. இது முழு திரையுலகமும், டி.ஆர். குடியிருக்கும் இந்தி பிரச்சாரசபா பகுதியும் அறிந்த உண்மை.)

ஒரு புறம் வழியை மறித்து வீட்டு வாசலில் ஒய்யாரமாக படுத்துக்கிடக்கிறது யானை. வெளியிலிருந்து வீட்டுக்குளோ, வீட்டிலிருந்து வெளியேவோ யாரும் போக வர முடியவில்லை. கூட்டம் வேறு கூடிக்கொண்டே போகிறது.

எல்லோருக்கும் டென்ஷன் எகிறிக்கொண்டே இருந்தது.

அப்புறம் டி.ராஜேந்தரின் புரடக்சன் மேனேஜர் மதி, கிளம்பிப்போய் அங்கே இங்கே அலைந்து யானைப்பாகனை “பிடித்து” வந்தார். அவனிடம் கெஞ்சி கூத்தாடி, யானையை அழைத்துப்போகச் சொன்னார்கள்.

மனம் இறங்கிய பாகன், யானைக்கு ஏதோ உத்தரவிட்டான். மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல, யானை எழுந்து நின்றது. பாகனுடன் புறப்பட தயார் என்பது போல தும்பிக்கையை உயர்த்தியது.

எல்லோரும் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்… “அப்பாடா..” என்றபடி நெற்றி வியர்வையைத் துடைத்துக்கொண்ட டி.ராஜேந்தர், பாகனை அழைத்து நூறு ரூபாயை நீட்டினார்.

“நீயே வச்சுக்க சார்.. யாரா இருந்தாலும் மதிப்பு கொடுத்து பேசுசார்.. முதல்ல வாயைக் கட்டப்பாரு..” என்று சொல்லியபடி, யானையுடன் புறப்பட்டுப்போனான் பாகன்.

பாகன் சொன்னதுதான் எத்தனை உண்மை… வாயைக்கட்டியிருந்தால் பிரச்சினையே இல்லை.. இது இப்போது சிம்புவுக்கும் பொருந்துவதுதான் ஆச்சரியமான சோகம்!