ரஜினி ரசிகர் பட்டாளத்தில் பாமரர் முதல் பத்திரிகையாளர்வரை பல தரப்பினரும் உண்டு. ரஜினி அரசியலுக்கு வந்து முதல்வராகி தமிழகத்தை தலைநிமிர்த்த வேண்டும் என்று ஆசைப்படுவோர் உண்டு.
அப்படிப்பட்ட ரஜினியை.. “சுயநலவாதி, பயந்தாங்கொள்ளி, அரசியலுக்கு வருவதாய் பூச்சாண்டி காட்டி தனது பட வியாபாரத்தை பெருக்குவதே அவரது நோக்கம்” என்று விமர்சிக்கிறது ஒரு புத்தகம். அதுவும் ஆய்வு நூல்!
இதை எழுதியவர் சாதாரண மனிதர் இல்லை. நீண்டகால ஊடக அனுபவம் உள்ளவர். புகழ் பெற்ற லயோலா கல்லூரியின் பேராசிரியர். எழுத்தாளர், கவிஞர்… சு.ராஜநாயகம்!
இன்னும் இவரை அறியாதவர்களுக்கு, சமீபத்தில் கருத்து கணிப்பு எடுத்து வெளியிட்டவர் என்றால் பட்டென்று புரிந்துவிடும். மக்கள் ஆய்வு மையத்தின் இயக்குநராகவும் இருக்கும் இவர், பல்வேறு பிரச்சினைகள் குறித்து மக்களின் கருத்தை அறிய கருத்து கணிப்புகள் நடத்தி இருக்கிறார்.
இவர் “பாப்புலர் சினிமா அண்ட் பொலிடிக்ஸ் இன் சவுத் இண்டியா – ரீஇமஜிநிங் எம்.ஜி.ஆர். & ரஜினி” ( Popular Cinema and Politics in South India – Reimagining MGR and Rajinikanth) என்ற ஆங்கில ஆய்வு நூலை எழுதியிருக்கிறார்.
அதில்தான் ரஜினியை, “சுயநலவாதி, பயந்தாங்கொள்ளி, தனது சினிமா வியாபாரத்துக்காக அரசியலுக்கு வருவதாய் பொய்த் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்” என்று எழுதி இருக்கிறார்.
ஆனால் இவற்றை வெறும் விமர்சனமாக வைக்கவில்லை. பல்வேறு தரவுகளைக் கொண்டு ஆய்வு செய்து எழுதியிருக்கிறார்.
716 ரூபாய் விலையுள்ள இந்த ஆங்கில நூல் இப்போது ஹாட் சேல் ஆகிக்கொண்டிருக்கிறது.
நூலாசிரியர் ராஜநாயகத்தை patrikai.com இதழுக்காக சந்தித்து பேசினோம்.
குறிப்பிட்ட இந்த ஆய்வு நூலை எழுதத் தூண்டியது எது?
“தமிழக வாக்காளர்கள் சினிமா கவர்ச்சிக்கு அடிமையானவர்கள்: நடிகர்கள் கண்ணசைத்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிடும்” என்றெல்லாம், அறிவு ஜீவிகள் எனப்படுபவர்கள் ஒரு கருத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். அது உண்மையா என்பதை ஆராயும் நோக்குடன், இந்த ஆய்வு நூலை எழுதினேன்.
1952ம் ஆண்டு இந்தியாவில் நடந்த பொதுத் தேர்தலில் இருந்து சமீபத்தில் 2014ல் நடந்த தேர்தல் வரையிலான அனைத்து தேர்தல்களையும் எடுத்துக்கொண்டேன். அந்தந்த தேர்தல் நடந்தபோது இருந்த சூழல், தேர்தலில் கட்சிகள் வாங்கிய இடங்கள், வாக்கு சதவிகிதம், கூட்டணி அனைத்தையும் விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்டதுதான் இந்த நூல்.
உங்கள் ஆய்வு முடிவு என்ன?
சினிமா கவர்ச்சியால் அண்ணா, கருணாநிதி, எம்.ஜிஆர். ஜானகி, ஜெயலிலிதா எல்லாம் முதல்வர் ஆனார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல.
இந்த வரிசையில முக்கியமானவர் எம்.ஜி.ஆர். அவரது அரசியல் கிராஃபை ஆராய்ந்தேன். தேர்தலில் அதிகபட்சமாக அவர் கட்சி 40 சதவிகிதம் ஓட்டு வாங்கியிருக்கிறது. அப்படியானால், அறுபது சதவிகிதம் பேர் அவரை நிராகரித்திருக்கிறார்கள் என்பதுதானே உண்மை.
இந்த இடத்தில் நம் நாட்டு தேர்தல் முறை பற்றி ஆராய வேண்டியிருக்கிறது. இங்கே, பத்து லட்சத்தி ஒரு ஓட்டு வாங்கியவர் ஜெயிக்கிறார். பத்துலட்சம் ஓட்டு வாங்கினவர் தோற்கிறார். தோற்றவர் வாங்கின ஓட்டு கணக்கிலேயே எடுத்துக்கப்படறதில்லை.
தவிர, சினிமாகாரராக எம்.ஜி.ஆர். அரசியலில் வெற்றி பெறவில்லை. சினிமாவில் அவர், எதற்கும் பயப்படாத ஹீரோ. ஆனால் மக்களிடம் ஓட்டு கேட்டு வரும்போது, பரிதாபத்துக்குரியவராக… அனுதாபத்துக்குரியவாகத்தான் எம்.ஜி.ஆர். தோற்றம் அளித்தார். “என்னை பழிவாங்கிட்டாங்க..” என்று பிரச்சாரம் செய்தார்.
தவிர முன்னதாகவே தனது ரசிகர் மன்றத்தை அரசியல்மயப்படுத்தி இருந்தார், தானும் அரசியலில் சில பொறுப்புகளில் இருந்தார். இப்படி சினிமா, ரசிகர் மன்றம், அரசியல் மூன்றையும் இணைத்து செயல்பட்டார்.
இதைத்தான் என் புத்தகத்தில் “சினிலேசன்” என்று குறிப்பிடுகிறேன். எம்.ஜி.ஆர். வெற்றிக்கு இந்த மூன்றும்தான் காரணம்.
மத்தபடி வெறும் சினிமா கவர்ச்சியால் அவர் வெற்றி பெற்றார் என்பது தவறு.
உங்க புத்தகத்தின் தலைப்பிலேயே ரஜினியும் இருக்கிறார். அவர் குறித்து ஆராய்ந்ததில் உங்களது முடிவு என்ன?
ரஜினி அரசியலுக்கு வருவார் என்று சில பத்திரிகைகள்தான், சொல்கின்றன. ஆனால் எந்த காலத்திலும் ரஜினி, அரசியலுக்கு வரமாட்டார்.
ரஜினியின் ஆரம்ப கட்ட படங்களை ஆய்வு செய்யும் போது அவருக்கு அரசியல் ஆர்வம் இருந்திருப்பது புரிகிறது. வில்லன் பாத்திரங்களில் இருந்து ஹீரோ ஆன பிறகு, புரட்சிக்கார இமேஜ் வரும்படியான படங்கள்ல ரஜினி நடித்திருக்கிறார். 90களில் அவரது படங்களில் வெளிப்படையாகவே அரசியல் வசனங்களை பேசியிருக்கிறார். பிறகு தன்னை ஒரு காமெடியனாகவே அவர் ஆக்கிக்கொண்டார்.
தவிர, எம்.ஜி.,ஆரை போல டீசண்ட்டான முறையில தன்னை வெளிப்படுத்தும் நேர்மை, தைரியம் ரஜினிக்கு இல்லை.
அரசியலைப் பொறுத்தவரை ரஜினி ஒரு கோழை. உறுதியான இறுதியான நிலைபாட்டை அவர் எடுக்கவே இல்லை… எடுக்க விரும்பலை.
அவரைப் பொறுத்தவரை, அரசியல் குறித்து ஆர்வம் இருக்கும் அதே நேரம் பயமும் இருக்கு. “அரசியல் என்பது ரொம்ப சிரமமானது. அரசியல்வாதிகளை நாம் மதிக்கணும்” என்று அவர் பேசியதில் இருந்து இதை அறியலாம்.
அதே நேரத்தில் அரசியல் களத்தில தனது பெயர் அடிபட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அதை வைத்து தனது சினிமாவை ஓட்டிவிட வேண்டும் என்கிற நேர்மையற்ற வியாபாரத் தந்திரம்தான் ரஜினியிடம் இருக்கிறது.
மற்றபடி அவர் அரசியலுக்கு வர மாட்டார். வந்தாலும் மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்.
ஏன் அந்த முடிவுக்கு வந்தீர்கள்?
ரஜினியை மேடையில் வைத்துக்கொண்டே பலர், அவரை அரசியலுக்கு அழைத்திருக்கிறார்கள். “முதல்வராகும் தகுதி அவருக்குத்தான் இருக்கிறது” என்று பேசியிருக்கிறார்கள். எல்லாவற்றையும் மவுனமாக அனுமதிக்கிறார் ரஜினி.
அதே நேரம், “அரசியலுக்கு வருவீர்களா” என்று கேட்டால், “ஆண்டவன் கையில்தான் எல்லாம் இருக்கு” என்று நழுவுகிறார். இப்படி பல விசயங்களை ஆராய்ந்து புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.
1996ல் ரஜினி வாய்ஸால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என்கிற ஒரு கருத்து இருக்கிறதே!
அது தவறான கருத்து. அப்போது ரஜினி வாய்ஸ் கொடுத்திருக்காவிட்டாலும் அ.தி.மு.க. தோல்வி அடைந்திருக்கும். அந்த அளவுக்கு மக்களின் எதிர்ப்பு இருந்தது.
அந்த நேரத்துல சந்தன கடத்தல்காரர் வீரப்பன்கூட, அப்போதைய அ.தி.மு.க. அரசுக்கு எதிரா கடுமையா விமர்சனம் செய்தார்.
இருவரின் விமர்சனத்தையும் சன் டிவி தொடர்ந்து வெளியிட்டது. ரஜினியின் பேச்சு மணிக்கு ஒரு முறை ஒளிப்பானது. ஆகவே ரஜினி பேசியதை, “வாய்ஸ்” ஆக ஆக்கியது சன் டிவிதான். சொல்லப்போனால் அந்த தேர்தலில் எடுபட்டது சன் டிவியின் வாய்ஸ்தான்.
ஆனால் ஒன்று.. அந்தத் தேர்தலில் ரஜினி நின்றிருந்தால்.. தனி கட்சி ஆரம்பித்து தனித்து போட்டியிட்டிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்று முதல்வராகி இருப்பார். ஆனால் அதுவும் ரஜினியின் சினிமா கவர்ச்சிக்காக அல்ல.. ஜெயலலிதா மீதான எதிர்ப்புணர்வால். கடந்த 1999ம் ஆண்டும், 2004ம் ஆண்டும் ரஜினியின் வாய்ஸ் எடுபடவில்லை என்பதை கவனியுங்கள்! ஆகவே எப்போதுமே மக்கள் சினிமா கவர்ச்சிக்காக ஓட்டுப்போட்டது இல்லை. இனியும் போடப்போவது இல்லை.
சரி..ரஜினியிடம் நேர்மை இல்லை என்று நீங்கள் முடிவுக்கு வர என்ன காரணம்?
1996ல் தனக்கு வந்த அரசியல் அதிகார வாய்ப்பை, வெறும் வாய்ஸோடு விட்டுவிட்டார். சரி… அரசியலில் ஆர்வம் இல்லை என்றால் ஒதுங்கி இருக்கலாமே! ஆனால் ரஜினி அப்படி இல்லை.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. பொறுப்புக்கு வந்த பிறகு, ரஜினி ரசிகர்கள், “எங்களாலதான் திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால் எங்களை மதிப்பதில்லை” என்று தொடர்ந்து பேட்டி கொடுத்து வந்தார்கள். அவர்களை பேசவிட்டார் ரஜினி. அவரும் தனது படங்களில் அப்போதைய முதல்வர் கருணாநிதியை எச்சரிக்கும் விதத்தில் வசனம் பேசுவார்.
இதெல்லாம் சரியான நபர் செய்யக்கூடியதல்ல.
ரஜினி சுயநலவாதி என்று நீங்கள் குறிப்பிட காரணம் என்ன?
புத்தகத்தில் அதை விரிவாக எழுதியிருக்கிறேன். இப்போது ஒரு உதாரணம் மட்டும் சொல்கிறேன்.
2004ம் ஆண்டு, பா.ம.க. நிறுவனர் ராமதாஸை அரக்கன் என்று வர்ணித்த ரஜினி, அந்த கட்சி போட்டியிடும் ஆறு தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வ வேண்டும் என்று ஆவேசமாக அறிக்கை விட்டார்.
ஏன் என்று கேட்டால், “என், பாபா படத்தை ஓடவிடாக செஞ்சாங்க..அதான்” என்றார்.
நாடாளுமன்றத் தேர்தல் என்பது எவ்வளவு முக்கியமானது! தேசத்தின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கக்கூடிய தேர்தல்! அடுத்த ஐந்தாண்டுகள் யார் இந்த தேசத்துக்கு தலைமை வகிப்பது என்பதை முடிவு செய்யும் தேர்தல்!
அப்படி முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலை, தனது படத்தை தடுத்தவர்களை பழிவாங்க பயன்படுத்துகிறேன் என்றார்.
இதிலிருந்தே அவரது சுயநலத்தை அறிந்துகொள்ளலாம்.
ரஜினி அரசியலுக்கு வருவார் என்று நம்பிய.. நம்பும் அவர்களது ரசிகர் மனநிலை எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்?
ரஜினி தனது ரசிகர்களை ஏமாற்றிவருகிறார். அதை நியாயப்படுத்தவே முடியாது. அது தர்மத்துக்கு முரணானது. நேர்மையற்ற செயல்.
ரஜினி ரசிகர்கள் எதிர் பார்த்து எதிர்பார்த்து ஏமாந்துபோய், சோர்ந்து வெறுத்துப் போய்விட்டார்கள். உண்மையிலேயே அவர்கள்தான் துறவிகள் ஆகிவிட்டார்கள்.