aa

சென்னை:

நேர்மைக்கு பெயர் பெற்ற தமிழக முன்னாள் முதல்வர்கள், அண்ணாதுரை, பக்தவசலம் ஆகியோரை ஊழல்வாதிகள் என்று குறிக்கும் வகையில் பா.ம.க., தமிழகமெங்கும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வரும் சட்டமன்றத் தேர்தலில் டாக்டர் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி, பிரச்சாரம் செய்து வருகிறது பா.ம.கட்சி. இதன் ஒரு பகுதியாக அமெரிக்க பாணியில் வித்தியாசமான போஸ்டர்களை அவ்வப்போது தமிழகமெங்கும் ஒட்டி வருகிறது.

“மாற்றம் – முன்னேற்றம் – அன்புமணி” என்று போஸ்டர் ஒட்டிய பா.ம.க. இதை முன்னணி நாளிதழ்களிலும் ஒரு பக்க அளவுக்கு விளம்பரம் செய்தது.

“விளம்பரத்துக்கு செலவு செய்வதற்கு பதிலா,  பா.ம.க. நடத்திய இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்விட்டவர்கள், சிறை சென்றவர்கள் குடும்பங்களுக்கு உதவலாமே” என்று அப்போதே அதிருப்தி எழுந்தது.

அதோடு, சமூகவலைதளங்களில் இந்த போஸ்டரை வைத்து அன்புமணியை பலரும் கிண்டலடித்தார்கள்.

ஆனாலும், “ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கு கையெழுத்து” என்கிற கான்செப்டில் அடுத்த போஸ்டரை தமிழகம் முழுதும் ஒட்டியது பா.ம.க.

தற்போது மூன்றாவது போஸ்டரை ஒட்டியிருக்கிறது பா.ம.கட்சி. இது முணுமுணுப்பு, கிண்டல் ஆகியவற்றைத் தாண்டி கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

 

bb

அந்த போஸ்டரில் “50 ஆண்டு கால ஊழலுக்கு  முடிவு கட்டுவோம்” என்ற வாசகம்தான், அதிருப்திக்குக் காரணம்.

50 வருடங்கள் என்றால், கடந்த 1965ம் ஆண்டிலிருந்து ஊழல் என்கிற அர்த்தத்தில் போஸ்டர் ஒட்டியிருக்கிறது பா.ம.கட்தி.

1965ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்தவர் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பக்தவசலம். இவர் அடுத்து வந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று அண்ணாதுரை முதல்வர் ஆகும் வரை 6.3.1967 வரை முதல்வராக இருந்தார்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை இவர் கையாண்ட விதம் குறித்து மாற்றுக் கருத்து இருந்தாலும், கட்சி பேதமின்றி அனைவராலும் மதிக்கப்படுபவர். இவரது ஆட்சி காலத்தில்தான் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களின் வருமானத்தை மக்கள் நலப்பணிகளுக்காக பயன்படுத்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

மிகவும் நேர்மையானவர் என்று பெயர் எடுத்தவர், பக்தவசலம்.

அதே போல இவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்து, தான் இறக்கும் 3.2.1967 வரை,  முதல்வராக இருந்தவர் தி.மு.க. தலைவரான அண்ணாதுரை.  இவரும் நேர்மைக்கு பெயர் பெற்றவர்.

தனது அலுவலக பென்சிலை, தனது மகன் பயன்படுத்தியதை கண்டித்தவர். அந்த அளவுக்கு நேர்மயாக வாழ்ந்து மறைந்தவர்.

பக்தவசலமும், அண்ணாதுரையும் வெவ்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும்,  கொள்கை வேறுபாடுகள் கொண்டவர்கள் என்றாலும், நேர்மை என்பதற்கு இலக்கணமாய் திகழ்ந்தவர்கள்.

இவர்களையும் ஊழல்வாதிகள் என்று குறிப்பிட்டு பா.ம.க. சுவரொட்டிகளை தமிழகம் முழுதும் ஒட்டியிருப்பது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

“மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி அளிக்கும் வழக்கில் ஊழல் புரிந்தார் என்று அன்புமணி மீது சி.பி. ஐ. வழக்கு தொடுத்து விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. அவரது படத்தை போட்டு “ஊழலை ஒழிப்போம்” என்பதே நம்பகத்தன்மை இல்லாதது. இந்த நிலையில், நேர்மையாக வாழ்ந்து மறைந்த இரு தலைவர்களை அவமானப்படுத்துவது சரிதானா” என்ற கேள்வியையும் பா.ம.க. போஸ்டர்கள் எழுப்பி உள்ளன.