பைபிளில் வரும் கோலியாத்தை வீழ்த்திய டேவிட் போல, அசுர பலத்துடன் நின்ற சரத் – ராதாரவி அணையை அசைத்து அகற்றி வீசி எறிந்துவிட்டது விசால் அணி.
அந்த சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ள நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தது அந்த அணி.
முன்னதாக சங்கத்தின் புதிய செயற்குழுவின் முதல் கூட்டத்தை நடத்தி முடி்தது அப்படியே பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்தார்கள் அந்த அணியினர். அவர்களில் முதல் ஆளாக வந்தவர் தலைவர் நாசர்தான். பிறகு ஒவ்வொருவராக வர.. 11. 45க்குதான் எல்லோரும் மேடையேறினார்கள்.
முதல் ஆளாக பேச ஆரம்பித்த நாசர், “எங்கள் கருத்துக்களை அனைவரிடம் எடுத்துச் சென்ற மீடியா நண்பர்களுக்கும், கடுமையாக உழைத்த பாண்டவர் அணியினருக்கும், வாக்களித்த கலைஞர்களுக்கும் நன்றி…” என்று படபடவென சொல்லிவிட்டு தன் இருக்கையில் அமர்ந்துவிட்டார்.
சம்பிராதயத்துக்காக சுருக்கமாக நன்றி சொல்கிறார். மீண்டும் விரிவாக பேசுவார் என்று அனைவரும் நினைத்திருந்தார்கள்.
அந்த சமயத்தில் தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு தலைமையில் ஒரு டீம் மேடையேறி வாழ்த்து சொல்ல.. அடுத்தடுத்து சில சங்கங்களைச் சேர்ந்தவர்களும் வரிசைகட்டி வர.. மேடையில் ஒரே களேபரம்.
இவர்கள் அனைவரும் சென்றதும் விஷால் பேசத் துவங்கினார். அந்த சமயத்தில் நாசர் எழுந்து மேடையின் பின்புறமாக சென்றார். அப்படியே வெளியே எஸ்கேப் ஆகிவிட்டார். டென்சனில், தனது கைப்பையை மேடையிலேயே வைத்துவிட்டு அவர் சென்றுவிட இன்னொருவர் ஓடிப்போய் கொடுத்துவிட்டு வந்தார்.
டென்சனுடன் எஸ்கேப் ஆக என்ன காரணம்?
முந்திய நாள், வார இதழ் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த நாசர், “ரஜினியைவிடவும் எனக்கு ஒரு சதவிகிதமாவது தமிழுணர்வு அதிகமாக இருக்கிறது…” என்று சொல்லி, ரஜினியை கலாய்த்திருந்தார்.
அந்த பத்திரிகையின் இணையதளத்தில் இந்த செய்தி வெளியாக, ஆளாளுக்கு நாசரை எகிறியிருக்கிறார்கள். குறிப்பாக அவரது அணியைச் சேர்ந்தவர்களே, “இப்போதுதான் பெரும் பிரச்சினையுடன் தேர்தல் முடிந்திருக்கிறது. இனி நடிகர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்கிற நிலையில், ரஜினியை ஏன் கிண்டலடித்தீர்கள்” என்று கோபப்பட்டிருக்கிறார்கள்.
இதனால் நாசர் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார். தவிர, , இது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டால் என்ன செய்வது என்கிற பயமும் சேர்ந்துகொள்ள, மேடையில் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார் நாசர்!
தேவையின்றி ரஜினியை வம்புக்கு இழுத்தததால் வந்த வினை. இதே போல, சமீபத்திய தொ.கா. பேட்டி ஒன்றின் போது, காலை மிக நீட்டி ஏதோ படுத்துக்கொண்டே பேட்டி அளிப்பது போல அமர்ந்திருந்தார்.
“அவருக்கு மூக்கு நீளமாய் இருப்பது இயற்கையின் படைப்பு. ஆனால் நாக்கையும் காலையும் அடக்கமாக வைத்திருக்க வேண்டியது அவரது பொறுப்பு” என்கிறார்கள் பாண்டவர் அணியினர்.