கமுதி :
அதானி குழுமத்திற்கு நிலங்களை அளிப்பதற்காக உயிரோடு இருப்பவர்களை இறந்தவர்கள் என்று மோசடியாக பத்திரப்பதிவு செய்த விவகாரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் ரூ.5 ஆயிரத்து 436 கோடி மதிப்பில் சூரிய மின் சக்தி பூங்கா அமைக்க, அதானி குழுமம் மின்பகிர்மான கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக கமுதி அருகே நெல், பருத்தி, மிளகாய், மக்காச்சோளம் விளையும் விவசாய நிலங்கள் அதானி குழுமத்துக்காக வாங்கப்படுகின்றன.
இந்த நிலையில், உயிரோடு இருக்கும் நில உடமையாளர்களை இறந்து விட்டதாக சான்றிதழ் பெற்று, அவர்களது நிலங்கள் அதானி குழுமத்துக்காக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கமுதி வட்டத்திற்குட்பட்ட நிலங்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களிலுள்ள பத்திரப்பதிவு அலுவகங்களில் பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. அரசு புறம்போக்கு நிலங்களும், நீர்பிடிப்பு பகுதியில் உள்ள நிலங்களும் அதானி குழுமத்திற்கு வருவாய்த்துறையினர் மூலம் விற்பனை செய்தாகவும் புகார் எழுந்திருக்கிறது.
கமுதி தாலுகாவிற்கு உட்பட்ட செங்கப்படை, தாதாகுளம், இடையங்குளம் கிராமங்களில் அதானி குழுமத்திற்கு சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்காக நிலம் வளைக்கப்பட்ட விவகாரத்தில் வருவாய்த்துறை, பத்திரப்பதிவுத் துறையினர் சேர்ந்து முறைகேடுகள் செய்திருப்பதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.
கமுதி வட்டாரத்தில் வாழும் விவசாயிகள் பலர், தாங்கள் சாகவில்லை: உயிரோடுதான் இருக்கிறோம் என்று கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழ் வாங்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கமுதி தாசில்தார் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், “வருவாய்த்துறை உயர் அதிகாரிகள், பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை” என்று விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
பிரததமர் மோடியின் நெருங்கிய நண்பராக அறியப்படும் தொழிலதிபர் அதானி மீது ஏற்கெனவே பல குற்றச்சாட்டுகள் உலவிவருகின்றன. இந்த நிலையில் நில மோசடி புகாரும் சேர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.