0
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை மேலும் ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று அவரது தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு, திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தரப்பில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஜெயலலிதா தரப்பில் எதிர் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பிப்ரவரி முதல் வாரத்தில் இறுதிவாதம் தொடங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
இதற்கிடையே ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள்,”நாங்கள் பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜராக வேண்டி இருப்பதால் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும்”என்று கோரிக்கை விடுத்த னர். இதையடுத்து பிப்ரவரி 23-ம் தேதி முதல் இறுதிவாதம் தொடங்கி, தினமும் நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
இந்த நிலையில் மீண்டும் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் எல்.நாகேஷ்வர ராவ் கடந்த வெள்ளிக் கிழமை நீதிபதி பினாகி சந்திர கோஷ், அமித்வா ராய் அடங்கி அமர்வு முன்னிலையில் ஆஜராகி, “பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜராகி வாதிட்டு வருகின்றேன். தொடர் வேலைப் பளு  காரணமாக ஜெயலலிதா வழக்கில் வாதிட இறுதிவாதம் தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.
இதற்கு நீதிபதி பினாகி சந்திர கோஷ், “உங்கள் (ஜெயலலிதா) தரப்பில் உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் மனு கொடுங்கள்” என்றார்.  இதைத் தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர் தரப்பு வழக்கறிஞர்களும் உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் மனு அளித்தனர். எனவே இவ்வ‌ழக்கில் இறுதிவாதம் இன்று தொடங்குமா என்ற  கேள்வி எழுந்துள்ளது. ஜெயலலிதா தரப்பின் கோரிக்கைக்கு கர்நாடக அரசு, மற்றும் திமுக‌ தரப்பு எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளன.