சென்னை: அதிமுக முன்னாள எம்எல்ஏவும், முன்னாள் டிஜிபி நடராஜ், முதல்வர் ஸ்டாலின் குறித்த அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழக காவல்துறை தலைவராக பதவி வகித்தவர் ஆர். நடராஜ். இவர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அதிமுகவில் இணைந்தார். கடந்த 2016-ம் ஆண்டு சென்னை மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தனக்கு வந்த வாட்ஸ்அப் செய்தி ஒன்றை மற்றவர்களுக்கு பார்வர்டு செய்திருந்தார்.
அதில், இந்துக்களின் ஓட்டு தங்களுக்கு வேண்டாம் என்றும் இந்து ஓட்டுக்கள் இல்லாமலே நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாக இருந்தது. இந்த தகவல் பொய் என்றும், அந்த பொய்யான செய்தியை முன்னாள் டிஜிபி நடராஜ் பகிர்ந்ததாக முதலமைச்சர் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. மேலும் நிகழ்ச்சி ஒன்றிலும், இதுதொடர்பாக ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து திருச்சி சைபர் கிரைம் போலீஸார் 6 பிரிவுகளின் கீழ் முன்னாள் காவல் துறை தலைவரான நடராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த நட்ராஜ், பின்னர், தன்மீதான அவதூறு வழக்குக்கு தடை விதிக்கக்கோரிசென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்துள்ளது.