வடிவேலு ஹீரோவாக நடித்து கடைசியாக வந்த படம் எலி. அதற்கு முன்பு வெளியான தெனாலிராமன் சொதப்பியதால், இந்த எலியை புலி ரேஞ்சுக்கு பில்ட் அப் கொடுத்து வெளியிட்டார்கள்.
படம் வரும் முன்பு, “படத்தை பாத்து பாத்து செதுக்கியிருக்கேன்” என்று பத்து மணி நேரத்துக்கு ஒரு அறிக்கை விட்டார் வைகைப்புயல். இந்த படமும் பப்படம் ஆனது. “படத்துல காமெடி இருக்கலாம்… படமே காமெடி ஆயிடுச்சே” என்று ஆளாளுக்கு கிண்டலாக விமர்சனம் செய்தனர்.
ஆனால் வடிவேலோ, “படம் நல்லா இல்லேன்னு சொல்வறங்க எல்லாம் மெண்ட்டல்” என்று ஆவேசமாக பேட்டி கொடுத்தார்.
சுமார் 12 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், ஒரு கோடியை மட்டுமே வசூல் செய்தது. தயாரிப்பாளரான மதுரை சதீஷ்குமார், நிலைகுலைந்து போய்விட்டார்.
ஆகவே வடிவேலுவிடம், “ 12 கோடி பட்ஜெட்ல, எட்டு கோடி உங்களுக்கு சம்பளமா கொடுத்திருக்கேன். அதில பாதியாவது திருப்பிக்கொடுங்க” என்று கேட்டிருக்கிறார்.
வடிவேலுவோ, “அடுத்தபடம் எடுங்க.. சம்பளமே இல்லாம நடிச்சுத்தர்றேன்” என்று படித்துறை பாண்டி பாணியில் பதில் சொல்லிவிட்டார்.
பொறுமை இழந்த சதீஷ்குமார் இன்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வடிவேலு மீது புகார் கொடுத்துவிட்டார்.
அதில் “எலி’ படத்துக்கு தயாரிப்பாளராக்கி பெரும் நஷ்டத்திற்குள்ளாக்கிவிட்டார் வடிவேலு. பணத்தைத் திருப்பிக் கேட்டால் தர மறுக்கிறார். அதோடு முன்னாள் சட்டமன்ற துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, வடிவேலுவுக்காக என்னை போனில் மிரட்டுகிறார்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
“கோடீஸ்வர தயாரிப்பாளரை ஓட்டாண்டியாக்கி, ஆளைவைத்தும் மிரட்டுகிறாரே!” என்று வருத்தப்படுகிறார்கள் திரையுலகினர்.
“மூஞ்சிதான் பிஞ்சு… .ஆனா உள்ளுக்குள்ள ஒரு டெரரான மனுசன் இருக்கான்” என்று ஒரு படத்தில் வடிவேலு சொன்னது காமடி அல்ல.. நிஜம்தானோ?