சென்னை: அரசு பஸ்களில் சில்லரை பிரச்னை என்பது தினந்தோறும் நடக்கும் விஷயங்களில் ஒன்று. மீதி சில்லரையை வாங்குவதற்காகவே அடிக்கடி கண்டக்டர் முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கும் அனுபவம் பல பயணிகளுக்கு ஏற்பட்டிருக்கும்.
அவராக வரும் போது மெல்ல யோசித்து தான் மீதி சில்லரையை கேட்க வேண்டும். இல்லை என்றால் கண்டக்டர் எரிந்து விழும் காட்சியை பார்த்து வெட்கி தலை குணிய வேண்டிய நிலை தான் ஏற்படும். சிலர் போய் தொலையட்டும் என்று விட்டுச் செல்வதும் நடக்கும். பயணிகள் மறந்து சென்றுவிட்டால் நல்லது என்று நினைக்கும் கண்டக்டர்களும் இருக்கின்றனர்.
இந்த நிலையில் இருந்து மாறி சென்னை அரசு போக்குவரத்து கழக கண்டக்டர் கண்ணன் என்பவர், மீதி சில்லரையை வாங்காமல் மறந்து பஸ்சில் இருந்து இறங்கி சென்ற பயணியை மீண்டும் அழைத்து சில்லரையை கொடுத்தார் என்றால் நம்பவா முடிகிறது. ஆம் நடந்தது.
நேற்று வேளச்சேரியில் டி70 பஸ்சில் ஒரு பெண் பயணி ஏறினார். அவர் அசோக் பில்லர் செல்வதற்கு டிக்கெட் கேட்டு 100 ரூபாய் நோட்டை நீட்டினார். கண்டக்டர் கண்ணனிடம் சில்லரை இல்லை. இறங்கும் போது தருவதாக உறுதியளித்தார்.
மதியம் 1.20 மணிக்கு அசோக் பில்லர் பஸ் ஸ்டாப்பில் அந்த பெண் மீதி சில்லரையை வாங்காமல் மறந்துவிட்டு இறங்கி சென்றார். அப்போது சுதாரித்த கண்ணன் பஸ்சை நிறுத்துமாறு டிரைவருக்கு சிக்னல் கொடுத்தார். ரோடில் நடந்து சென்ற அந்த பெண்ணை அழைத்து மீதி 87 ரூபாயை வழங்கினார். அந்த பெண்ணோ அவர் அழைத்து கொடுத்ததை மதிக்கும் வகையில் மீதி சில்லரையை எண்ணாமல் கூட தனது பர்ஸில் வைத்துக் கொண்டு நன்றி கூறிச் சென்றார்.
இது குறித்து கண்ணன் கூறுகையில்,‘‘ பயணிகள் கேட்காவிட்டாலும், அவர்களுக்கு சரியான சில்லரையை திருப்பி தர வேண்டியது கண்டக்டரின் கடமையாகும். ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு தான் பணம் சம்பாதிக்கிறார்கள். அதனால் மற்றவர்களின் பணத்தை, அது ஒரு ரூபாயாக இருந்தாலும் அதை நாம் எடுத்துச் செல்லக் கூடாது’’ என்றார்.
கண்டக்டரின் இந்த செயலை பஸ்சில் பயணம் செய்த இதர பயணிகளும் பாராட்டினர்.
இதில் ஒரு பயணி கூறுகையில்,‘‘ நான் தினமும் பஸ்சில் தான் பயணம் செய்கிறேன். ஒரு ரூபாய், 2 ரூபாய்காக கண்டக்டர்களின் பயணிகள் வாக்குவாதம் செய்வதை பார்த்திருக்கிறேன். ஆனால், இந்த கண்டக்டரின் நேர்மையான செயல் பாராட்டத்தக்கது. இவரை மற்ற கண்டக்டர்கள் பின்பற்ற வேண்டும்’’ என்றார்.
ஒருவர் தனது கடமையை செய்தாலே ஆச்சர்யமாக பார்க்க வேண்டிய கட்டாய நிலை நம் நாட்டில் ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு அரசு அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரையிலான கடமை உணர்ச்சி காற்றில் கொடி கட்டி பறக்கிறது.