vijayatharani
vijayatharani

விளவங்கோடு எம்.எல்.ஏ.வும், தமிழக சட்டசபை காங்கிரசின் கொறடாவுமான விஜயதரணி கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி  தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். சமீப நாட்களாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும் விஜயதரணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுளளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் விழா ஒன்றில் விஜயதரணி தரப்பினர் வைத்த போஸ்டரை இளங்கோவன் தரப்பினர் கிழித்ததாக பிரச்சினை ஏற்பட்டது. இருவரும் கடுமையான வார்த்தைகளை பறிமாறிக்கொண்டதாகவும் தகவல் வெளியானது. காவல் துறியிலும் பரஸ்பரம் புகார் கொடுக்கப்பட.. மேலிடம் தலையிட்டு புகார்களை வாபஸ் வாங்க வைத்தது.
இந்த நிலையில்  விஜயதரணியிடமிருந்து தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்ட.. அவர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து புகழ… இப்போது அ.தி.மு.கவில் விஜயதரணி சேருவாரா என்பதுதான் ஹாட் டாபிக்!
நாம் விஜயதரணியை தொடர்புகொண்டு patrikai.com  இதழுக்காக பேசினோம்:
 
e.v.k.s. elangovan
e.v.k.s. elangovan

 
 உங்களுக்கும் இளங்கோவனுக்கும் அப்படி என்னதான் பிரச்சினை?
நான் கட்சியை முன்னிறுத்த விரும்புகிறேன். இளங்கோவன் தன்னை முன்னிறுத்த விரும்புகிறார். அதுதான் முக்கிய பிரச்சினை. அதோடு,  பெண்களை தொடர்ந்து ஆபாசமாக பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.  சுயமரியாதை உள்ள பெண்கள்,  இளங்கோவன் தலைமையில் செயல்பட முடியாது.
எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது விமர்சனம் வைப்பதில் தவறில்லை. ஆனால் அநாகரீகமான முறையில் விமர்சனம் செய்யக்கூடாது. முதல்வர் ஜெயலலிதாவை அப்படித்தான் அநாகரீகமாக இளங்கோவன் விமர்சித்தார். விஜகாந்த், பாஜகவின் தமிழிசை எல்லோரையும் அப்படித்தான் விமர்சிக்கிறார். சொந்த கட்சியைச் சேர்ந்த நடிகை நக்மாவை கூட அவர் அவதூறாக பேசி உள்ளார்.
எனது தலைமையிலான தமிழக மகிளா காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்ட பேனரை அவரது ஆதரவாளர்கள் கிழித்தனர். அது குறித்து அவரிடம் புகார் செய்ய போனபோது, என்னை நேரடியாகவே மிக அருவெறுப்பான வார்த்தைகளால் ஏசினார்.
இதனால்..
பொறுங்கள்…! இளங்கோவன் தொடர்ந்து இப்படி பேசி வருவதால் தமிழக காங்கிரசை எந்த கட்சியும் கூட்டணியில் சேர்க்க விரும்பாத நிலை ஏற்பட்டுள்ளது.   மேலும் பெண்கள் ஓட்டும் காங்கிரசுக்கு கிடைக்காது. எனவே இளங்கோவனை தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து உடனே மாற்ற வேண்டும். அப்போதுதான் காங்கிரஸுக்கு நல்ல எதிர்காலம் ஏற்படும்!
சரி, உங்களது கருத்தை மேலிடத்தில் சொன்னீர்களா?
இளங்கோவன் கட்சியை வளர்க்கும் பணிகளைச் செய்யாமல், வீழ்த்தும்படியாக பேசி வருவதையும், தனக்கென அணியை வைத்துக்கொண்டு செயல்படுவதையும்  மேலிடத்தின் கவனத்துக்கு ஏற்கெனெவே கொண்டு சென்றிருக்கிறேன். இவர் தமிழக காங்கிரஸ் தலைவர் ஆன பிறகு கட்சி எந்த வளர்ச்சியும் அடையவில்லை.  கட்சிக்கு பூத் கமிட்டிகள் கூட சரிவர இல்லாத நிலைதான் உள்ளது என்பதையும் சொல்லியிருக்கிறேன்.
பிறகு ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?
நியாயமாக பார்த்தால் இளங்கோவனைத்தான் பதவியில் இருந்து நீக்க வேண்டும். தவறுதலாக என்னை நீக்கி இருக்கிறார்கள்.  தற்போது  தலைவர் சோனியா, துணைத்தலைவர் ராகுல் ஆகியோரை சந்திக்க அனுமதி கேட்டிருக்கிறேன். விரைவில் சந்தித்து மீண்டும் சூழ்நிலையை விளக்குவேன். நல்லதே நடக்கும்.
 
kushboo
kushboo

 உங்களது பதவி பறிக்கப்பட்டதற்கு குஷ்புவை ஏன் விமர்சிக்கிறீர்கள்?
குஷ்பு செல்லுமிடமெல்லாம் குழப்பம்தான். ஏற்கெனவே தி.மு.க.வில் இருந்த போது, அங்கு குடுமபத்தில் பிரச்சினையை ஏற்படுத்தினார். அதனால்தான் வெளியேற்றப்படும் சூழல் ஏற்பட்டு இங்கு காங்கிரஸுக்கு வந்தார். இங்கும் அதே போல குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். ஆகவேதான் எனது பதவி பறிப்புக்கு குஷ்பு காரணமாக இருக்கலாம் என்று சொன்னேன்.
 
jayalalitha
jayalalitha

திடீரென முதலவர் ஜெயலலிதாவை புகழ்ந்திருக்கிறீர்கள்.. அவரை சந்திக்கவும் செய்திருக்கிறீர்களே…
அதில் என்ன தவறு… அரசியலில் முக்கிய பொறுப்பு வகிக்கும் பெண்மணி அவர். அவரது சிறப்பான செயல்பாடுகளை, சக அரசில்வாதியாகிய நான் புகழ்வதில் என்ன தவறு…?
ஜெயலலிதாவுடனான சந்திப்பு குறித்து…
அதிலும் தவறில்லையே.. தமிழகம் முழுவதுக்கும் பொதுவான முதல்வர் அவர். நல்ல பொலிடீசியன்.  அவரை சந்திப்பதில்.. அதுவும் ஒரு சட்டமன்ற உறுப்பினரான நான் சந்திப்பதில் என்ன தவறு?
 
rahul gandhi
rahul gandhi

தமிகத்தில் நிலவும் அரசியல் நடைமுறைகள் பற்றி நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை. சமீபத்திய உங்கள் நடவடிக்கைகள், அ.தி.மு.க.வில் நீங்கள் இணைவீர்களோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறது..
(சிறு மவுனத்துக்குப் பிறகு…) விரைவில் ராகுல் காந்தியை சந்திக்க இருக்கிறேன். அவர் எனஅன சொல்கிறார் என்பதை பார்த்துவிட்டுத்தான் எந்த முடிவும் எடுப்பேன்.
சரி… அ.தி.மு.க.வின் அதிகார பூர்வ நாளேட்டில் உங்களை மிகக் கொச்சையாக சித்தரித்ததாக, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா மீது அவதூறு வழக்கு தொடுத்தீர்கள். அநேகமாக ஜெயலிலதா  இந்த ஆட்சிகாலத்தில் தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கு இதுவாகத்தான் இருக்கும். இப்போது அந்த வழக்கு எந்த நிலையில் இருக்கிறது….
#  போன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. விஜயதரணி வெளியூரில் இருப்பதால் சிக்னல் பிரச்சினையாக இருக்கலாம்.  விரைவில் அவரை தொடர்புகொண்டு இந்த கேள்விக்கும் பதில் பெற்று அளிக்கிறோம்.
பேட்டி: டி.வி.எஸ். சோமு
.