மறக்க முடியாத முத்துக்குமார்..
நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…

யார் எப்படி ஆளாவார்கள் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது என்பதற்கு எல்லார் வாழ்விலும் பல உதாரணங்கள் இருக்கும்.. அதைப்போலவே நமக்கும்.
சின்ன காஞ்சிபுரம், அறிஞர் அண்ணாவின் வீட்டுப் பக்கம் போகும் போதெல்லாம் தம்பி நா. முத்துக்குமாரின் நினைவுகள் தலைதூக்கத் தவறாது.
ஒரு காலத்தில் ஞாயிறு சாயந்திரமானா, திராவிட நாடு ஆபிஸ் பக்கம் போனா ஒரு கையேந்திபவன் பக்கம் சினிமா கனவுகளோடு அவுங்க செட் சகிதமாய் நிறையவே பேசுவார் தம்பி..
கொஞ்சம் விரக்தியாக பேசும்போது அவர் வாயிலிருந்து வரும் வார்த்தை கள் கிட்டத்தட்ட கண்ணதாசனை நினைவுபடுத்தும்.
”பொண்டாட்டி நகையை வித்து கவிதை புஸ்தகம் போட்டு பாக்க வர்றவனுக்கெல்லாம் விசிட்டிங் கார்டா குடுத்துக்கிட்டு இருக்கேண்ணா”
ஊருக்கு பெருமை சேர்த்துவிட்டு இவ்வளவு சின்ன வயதில் போய் சேருவார் என்று நாங்கள் யாருமே நினைக்கவேயில்லை..
சென்னைக்கு வேலைக்கு வந்த 90′ காலகட்டங்களில்.வாரத்திற்கு இரண்டு முறையாவது காலை லயோலா கல்லூரி வாசல் பக்கம் சந்திப்போம். ஊர் பாசத்தோடு நிறைய பேசுவார். சினிமா கனவுகளோடு முத்துக்குமார் போராடிக் கொண்டிருந்த காலம் அது.
பின்னாளில், போனில் பேசிய சில சந்தர்ப்பங்களில் நாம் தவறாமல் கேட்கும் ஒரே கேள்வி.. ஏன்யா வாய் விட்டு சிரிக்கவே மாட்டீயா.. எந்த போட்டோவுல பார்த்தாலும் சோகமாவே தெரியறயே? என்பதுதான்.
முத்துக்குமாருக்கு தேசிய விருது என்ற தகவல் கிடைத்தவுடன் தொடர்பு கொண்டு பேசிய போது கூட அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
“இதபார் தம்பி பைபாஸ் சர்ஜரி பண்ணி ஆறு ஏழு மாசம் தான் ஆகுது. பூந்தமல்லி பைபாஸ் கேஎஃப்சி மொக்கிகிட்டு இருக்கேன். தேசிய விருது வாங்கப்போற நீ சந்தோசமே படாம பேசுற. வாட் இஸ் திஸ்?” என்று கிண்டலாக பேசினோம்.
“ஆனந்த யாழை மீட்டுகிறாய்” உடன் நாம் பேசிய கடைசி பேச்சு அதுதான்..
இன்னொரு விஷயம் சொன்னால் நம்ப மாட்டீர்கள் முத்துக்குமார் முன்னணி பாடலாசிரியராக பின்னி பெடல் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று சன் டிவி எடிட்டோரியலில் மற்றவர்கள் சிலாகித்து பேசிய போதுதான் அவருடைய அருமை பெருமைகளே தெரிய வந்தது நமக்கு.
அந்த அளவுக்கு பலரையும் விட்டு விலகி சன் டிவி செய்தி பிரிவில் பரபரப்பு வாழ்க்கையோடு மாரடைத்துக்கொண்டிருந்தோம்.
முத்துக்குமார் இளம் வயதில் பெரும்பான்மையாக நேரத்தை கழித்தது காஞ்சிபுரம் காந்தி ரோடில் உள்ள ஜோதி புக் ஸ்டாலில்தான். நமக்கும் அங்கேதான் முகாம்.
கடைக்கு அவர் செல்ல பிள்ளை மாதிரி. புதிதாக வரும் அனைத்து புத்தகங்களையும் உடனே படித்து முடித்து விடுவார். விசேஷ நாட்களில் ஜோதி புக் ஸ்டால் கும்பலே ஒன்றாக போய் சரவணபவனில் டிபன் சாப்பிடுவோம். அங்கே கலகலவென்று பேச்சு ஓடும். அவையெல்லாம் மறக்க முடியாத நாட்கள்.
தமிழர்களின் உலகமே போற்றும் திரைப்பட பாடல் ஆசிரியராக உயர்ந்த பிறகு, முத்துக்குமாரிடம் அந்த கலகலப்பு எங்கே போனது என்பதுதான் தெரியவில்லை.
பாடலாசிரியராக ஆகும் முன்பு இருந்த முத்துக்குமாரை நன்றாக தெரியும். ஆனால் பாடலாசிரியர் முத்துக்குமாரைத்தான் அவ்வளவாக தெரியாமல் போய்விட்டது.
தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்புத் துறையிலும் சினிமா உலக பிரபலங்கள் மத்தியிலும் கோலேச்சிவரும் எங்கள் காஞ்சிபுரத்து நண்பர் Vetri Vel மூலம் தான் பல விவரங்கள் தெரிய வந்தது.
காஞ்சிபுரத்தில் அவர் படித்த ஆந்திரசன் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் நடந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் நாம் பேசியபோது காஞ்சிபுரத்தில் ஏதாவது ஒரு வீதிக்கு கவிஞன் முத்துக்குமாரின் பெயரை சூட்டுங்கள் என்று கோரிக்கை வைத்தோம். வழக்கம்போல் யார் காதிலும் ஏறவில்லை.
41 வயதிலே இயற்கை வசம் போனவர், இருந்திருந்தால் இன்று 51 பிறந்தநாளை கொண்டாடியிருப்பார்..
என்றென்றும் உன் புகழ் நிலைக்கட்டும்..