p

சென்னை:

குடிபோதையில் தகறாறு செய்து, இரும்புக்கம்பியால் தாக்கிய மருமகனை போலீஸ்கார மாமனார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, பட்டினப்பாக்கம் ரோகினி கார்டன் பகுதியை சேர்ந்தவர், சங்கரபாண்டியன். சென்னை ஆயுதப்படை போலீஸ், சிறப்பு எஸ்.ஐ., ஆக பணியாற்றும் இவர் மத்திய அரசு வழக்கறிஞர் ராஜகோபாலின் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம், தனது மகள் அபினயாவை (வயது 22) , உறவுக்காரர் ராஜசேகரனுக்கு (வயது 28) திருமணம் செய்து வைத்தார். ராஜசேகரனுக்கு குடிப்பழக்கம் உண்டு என்றும், வேலைக்கு ஒழுங்காக செல்லாமல் அபினயாவிடம் கூடுதலாக வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தினார் என்றும் கூறப்படுகிறது. ஆகவே அபினயா, பெற்றோரின் வீட்டிற்கு வந்துவிட்டார்.

இந்த நிலையில், நேற்று இரவு, செல் போனில், அபினயாவை தொடர்பு கொண்ட ராஜசேகரன், “நான் கட்டிய தாலியை திருப்பிக்கொடு. உனடியாக மந்தவெளி, செயின்ட் மேரிஸ் சாலைக்கு வா. இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்” என்று மிரட்டினார்.

இதனால் பதற்றமடைந்த அபினயா, தன் கணவர் தெரிவித்த இடத்திற்கு நேற்று இரவு, 9 மணி அளவில் சென்றார். தகவல் அறிந்து, மகளைத்தேடி சுந்தரபாண்டியனும் அங்கு வந்தார்.

அங்கு மாமனாருக்கும் மருமகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென மருமகன் ராஜசேகரன், தனது மாமனார் சுந்தரபாண்டியனை இரும்பு கம்பியால், ராஜசேகரன் அடித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த சுந்தரபாண்டியன், தான் வைத்து இருந்த கைத்துப்பாக்கியால், மருமகன் ராஜசேகரனை நோக்கி நான்கு முறை சுட்டார். வயிற்றில், இரண்டு குண்டு பாய்ந்த நிலையில், ராஜசேகரன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

உயிருக்கு போராடிய கணவனை, அபினயா அந்த வழியாக சென்ற ஆட்டோவை மறித்து ஏற்ற முயன்றார்.   அதற்குள், அங்கு கூடிய மக்கள், காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவே, மயிலாப்பூர் போலீசார் விரைந்து வந்து, ராஜசேகரனை அடையாறு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சுந்தரபாண்டியனிடம் தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.