j-arrogance-by-seeman1

கடந்த (ஜூலை) மாதம் 16ம் தேதி நமது பத்திரிகை டாட் காம் இதழ் பேட்டியில், “தமிழக அரசு மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்கணும். அதுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 15க்குள்ள வரணும்.. இல்லேன்னா, தமிழ்நாட்டுல இருக்கிற அத்தனை சராயக்கடைங்களையும் ஒரே நாள்ல அடிச்சு மூடிருவேன்” என்று ஆவேசமாகச் சொல்லியிருந்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தமிழக அரசுக்கு அவர் விதித்திருந்த கெடு நெருங்கிவிட்ட நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் இருக்கும் நாம் தமிழர் கட்சி தலைமையகத்தில் சீமானை சந்தித்தோம்.

தமிழக அரசுக்கு நீங்கள் விதித்திருந் கெடு நெருங்கிவிட்டதே..

“ஒரே நாள்ல அத்தனை கடையயும் எடுங்க அப்படின்னு சொல்லலை… கொஞ்சமா குறைக்க முயற்சியாவது செய்யுங்கன்னுதான் சொல்றோம்.. பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள் அருகில் இருக்கிற மதுக்கடைங்கள மூடணும். அதுக்கான அறிவிப்பையாவது வெளியிட்டு, நம்பிக்கையை ஏற்படுத்தணும். நல்லதொரு அறிவிப்பை அரசு வெளியிடும்னு எதிர்பார்க்கிறோம்…

“அரசு அறிவிப்பு வராவிட்டால் மதுக்கடைகளை அடித்து உடைத்து ஒரே நாளில் மூடுவோம்” என்றீர்களே..

(சிரிக்கிறார்) அந்த எங்களது வழிமுறையைத்தான் இப்போ மத்தவங்க எடுத்திருக்காங்க..! ஆனா, மது ஆலையை நாங்கதான் முற்றுகையிட்டோம். மது எதிர்ப்பு பேசற மத்த கட்சிகள் இதைசெய்ய மாட்டாங்க.. ஏன்னா, அவங்க எல்லாம் சாராய ஆலை முதலாளிகள்கிட்ட காசு வாங்கறாங்க… தவிர, நாங்க பல தளங்களில் போராடிட்டோம். இனிமே அரசுதான் நடவடிக்கை எடுக்கணும்.

மதுவிலக்கு கோரி போராடிவரும் (நந்தினி) ஆனந்தன், “சசிபெருமாளின் தியாகத்தை தங்களது சுயநலத்துக்காக அரசியல்வாதிகள் பயன்படுத்துகிறார்கள். அவரது குடும்பத்தினரை ஆட்டுவிக்கிறார்கள்” என்று பத்திரிகை டாட் காம் இதழில் கூறியிருந்தார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

ரெண்டு லட்சம் பேரு, குடிச்சே செத்தான்.. அய்யா சசிபெருமாள், “குடிக்காதே”னு சொல்லி செத்தார். அவரோட தியாகம் மெச்சத்தக்கது. ஆனா அரசியல் தலைவர்கள் சிலர், அந்த தியாகத்தை தங்களது சுயநலத்துக்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள். அதனாலதான் அவருக்கு அஞ்சலி செலுத்தும்போது விலகியே நின்னேன். சசிபெருமாள் குடும்பத்தினரிடம் ஆதிக்கம் செலுத்த சில அரசியல் தலைவர்கள் முயல்கிறார்கள். சசிபெருமாள் குடும்பத்தினர் “எங்களுக்கு ஒரு ரூபாகூட வேண்டாம்” என்றார்கள். ஆனா பத்து லட்சம், அஞ்சு லட்சம்னு கொடுக்குறாங்க…

சசிபெருமாள் குடும்பத்துக்கு ஸ்டாலின், பத்து லட்ச ரூபாய் நிதி அளித்திருக்கிறாரே..

காலம் காலமா சாராயத்தால பலலட்சம் கோடி கொள்ளையடிச்சாங்க.. அதுக்கு பரிகாரமா பத்து லட்ச ரூபாய் கொடுத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்! ஜெயலலிதா, டாஸ்மாக் கொண்டு வருவதற்கு முன்னால், கருணாநிதி ஆட்சியில் இருந்தபோதெல்லாம் அவரது தி.மு.கழகத்தைச் சேர்ந்த பகுதி செயலாளர், ஒன்றிய செயலாளர்கல்தான் மதுக்கடையை நடத்தினாங்க.. குடிப்பகங்களையும் அவங்தான் நடத்தினாங்க. அதில கோடி கோடியா சம்பாதிச்சுதான், திமுக எதிர்க்கட்சியா இருந்தாலும் மாநாடு பொதுக்கூட்டத்துக்கு செலவழிக்கிறாரே,,, மாநாட்டு மேடையில அண்ணா அறிவாலயம், செஞ்சிக்கோட்டைனு செட் போடுறாங்க.. அந்த பணத்தத்தான் தேர்தலப்போ தலைக்கு ஐநூறு, ஆயிரம்னு வீசி ஓட்டு வாங்கறாங்க.. அந்த பணத்திலேருந்துதான் இப்போ பத்து லட்ச ரூபாய் கொடுத்திருக்காங்க..! அதுக்காக ஜெயலலிதா நல்லவங்கன்னு சொல்லலை.. மது சில்லறை விற்பனையை அரசுக்கு கொண்டுவந்தாங்க ஜெயலலிதா. ஆனா, மது ஆலைகள் வருமானம் யாருக்கு போகுது..? மிடாஸ் மது ஆலை வருமானம் யாருக்குப்போகுது? கருணாநிதி ஜெயலலிதா இருவருமே இப்படித்தான். ஒட்டுமொத்தமா சொன்னா திராவிட கட்சிகளே இப்படித்தான். அதனாலதான் சொல்றோம்… (குரல் உயர்த்தி) பற்றி எரியும் சாராய நெருப்பில் சாகட்டும் திராவிட ஆட்சிகள்.. !

j-arrogance-by-seeman

 

சாராய ஆலை முதலாளிகள் இல்லாத மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் சசிபெருமாள் குடும்பத்துக்கு நிதி அளித்தன.. அதை எப்படி பார்க்கிறீர்கள்?

அவங்களால முடிஞ்சத செய்யறாங்க.. என்னால முடியல… செய்யல.. அதனால அய்யா சசிபெருமாள் குடும்த்துமேல எனக்குஅக்கறை இல்லேனு ஆயிடுமா..?

மக்களின் போராட்டத்துக்கு மதிப்பளித்து மதுவிலக்கை கொண்டுவரவேண்டும் என்று கருணாநிதி சொல்லியிருக்கிறாரே..

மக்கள் போராட்டத்தை மதிக்க வேண்டும்தான். அதுதான் ஜனநாயகம். ஆனால் அதைச் சொல்ல கருணாநிதி சொல்வதுதான் வேடிக்கை. ஈழப் போர் உச்சகட்டத்தை அடைந்து அங்கே மக்கள் மாண்டுகொண்டிருந்த சமயம். அந்த கொடுமையை தடுக்கக் கோரி வழக்கறிஞர் போராடியபோது, கணக்கிலடங்காத காவல்துறையினரை நீதி மன்றத்துக்குள் அனுப்பி வழக்கறிஞர்களை கண்மூடித்தனமாக தாக்கச் செய்தவர் கருணாநிதி. நீதிபதியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டும் நிலை ஏற்பட்டது. அப்படிப்பட்ட கருணாநிதிதா் இன்று மக்கள் போராட்டத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்கிறார். ஜெயலலிதா செய்வது தவறுதான். ஆனால் அதைச் சுட்டிக்காட்டும் அருகதை கருணாநிதிக்குக் கிடையாது.

மதுவிலக்கு கோரி திமுக நடத்திய போராட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன?

அந்த போராட்டத்தில், “அறுக்காதே.. அறுக்காதே! தாலியை அறுக்காதே”னு முழக்கமிட்டாங்க. அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? வேற யாரும் அறுக்க வேண்டாம். நாங்களே அறுப்போம்னு சொல்றாங்க.. அதான் அர்த்தம்! கூட்டத்துல திருடியவன், “திருடன், திருடன்”னு கத்திகிட்டே தப்பிக்க நினைக்கிற மாதிரிதான் இதுவும்!

கருணாநிதி மற்றும் திமுகவினர் மனம் மாறியிருக்கலாமே.. முழு மதுவிலக்கு வந்தால் நல்லது என்று இப்போது நினைத்திருக்கலாமே.. ஏன் சந்தேகப்பட வேண்டும்..?

நாங்க வந்தா மதுவிலக்கு கொண்டுவருவோம்னு இப்ப சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க.. ஏற்கெனவே வந்தப்பல்லாம் ஏன் செய்யலை..? தவிர திமுக ஆட்சியில அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலின், மதுக்கடைகளை மூடுவது சாத்தியமில்லை என்று சட்டசபையிலேயே சொன்னாரே.. அவர்களை எப்படி நம்ப முடியும்? சரி,, உண்மையிலேயே கருணாநிதிக்கு நல்ல மனமாற்றம் வந்துவிட்டது என்ரே வைத்துக்கொள்லவோம். அப்படியானால் அவர் என்ன செய்திருக்க வேண்டும்? “கடந்த காலத்தில் மதுவிலக்கை ரத்து செய்தது தவறுதான். அதை உணர்ந்துவிட்டேன். அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.. “ என்று வெளிப்படையாக சொல்ல வேண்டும். ஆனால், இப்போதும்கூட தனது தவறுக்கு காரணங்களை அடுக்குகிறாரே தவிர உணர்ந்தபாடில்லையே.. இவரை எப்படி நம்பவது?

தமிழக அரசுக்கு நீங்கள் விதித்த கெடு தேதியான ஆகஸ்ட் பதினைந்து நெருங்கிவரும் நிலையில், இன்னமும் தமிழக அரசிடமிருந்து மதுவிலக்கு குறித்து எந்தவித அறிவிப்பும் வரவில்லை.. அப்படியோர் அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? 

slider3

 

நம்பிக்கை இருக்கு.. செய்வாங்க.. ! ஆனா அவங்களோட அகந்தைதான் தடுக்குது.. ஆனாலும் நம்பிக்கை இருக்கு!

அப்படி இல்லையென்றால் உங்கள் போராட்டம்

செஞ்சிட்டு சொல்றேன்…

( *தமிழ்த்தேசியம் என்ற நோக்கில் நீங்கள் விரும்புவது தனித்தமிழ்நாடா, தன்னுரிமை கொண்ட சுயாட்சி பிரதேசமா?

*தமிழர் என்றால் யார்?

– மேலும் பல கேள்விகள்.. சீமான் பதில்கள்… 17.08.15 திங்கள் அன்று…)

– டிவிஎஸ். சோமு   https://www.facebook.com/reportersomu