naamthamilar-adhiradi

சீமானின் பேச்சுக்கள் எப்போதுமே அதிரடிதான். அதனால் பல வழக்குகளை எதிர்கொண்டிருக்கிறார்… சிறைவாசமும் அனுபவித்திருக்கிறார். அவரது தம்பிகள், இப்போது அதிரடியான செயலிலும் இறங்கிவிட்டார்கள்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் நேற்று காமராஜர் பிறந்தநாளை கொண்டாடிய “நாம் தமிழர் கட்சி” தொண்டர்கள். திடுமென “பள்ளி, கல்லூரிகள் உள்ள மதுக்கடையை உடனே அகற்று” என்று முழக்கமிட்டபடியே, அருகில் இருந்த மதுக்கடையை அடித்து துவம்சம் செய்தனர். பல லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் உடைக்கப்பட்டன. விரைந்து வந்த காவல்துறையினர், நாம் தமிழர் தொட்ண்டர்களை கைது செய்திருக்கிறார்கள். இந்த சம்பவம் தமிழகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் கருத்தை அறிய அவரிடம் பேசினோம்.

 

எந்தவித அறிவிப்பும் இன்றி திடுமென மதுக்கடையை உடைப்பு நடந்திருக்கிறீர்களே..

மதுவால் தமிழ் சமுதாயம் எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தமிழ் இனத்தை நாசமாக்கும் மதுக்கடைகளை மூடுங்கள் என்று எத்தனையோ முறை எத்தனையோ பேர் பேசியிருக்கிறோம். போராட்டம் நடத்தி இருக்கிறோம்.. ஒரு பயனும் இல்லை. சின்ன பையனுக்கு தாய்மாமன் ஊத்திக்கொடுக்கிறேன். உடனே அந்த மாமன்காரன் மீது நடவடிக்கை எடுக்கிறது.. ஆனா, அந்த தாய்மாமனுக்கு ஊத்திக்கொடுத்த அரசு மீதுதானே நடவடிக்கை எடுக்கணும்? ஒரு லட்சத்தி 25 ஆயிரம் பேரை கொன்றான் ராஜபக்சே. அதை இனப்படுகொலை என்று ஆத்திரப்படுகிறோம். மதுவால் இங்கே இரண்டு லட்சம் பேர் செத்திருக்கான்.. ஆக, இனப்படுகொலையைவிட மோசமானது அல்லவா இந்த மதுவும், அதை ஊற்றிக்கொடுக்கும் அரசும்? அது மட்டுமல்ல.. மக்களின் இறுதியான நம்பிக்கை நீதி மன்றம். அதுவே, “மதுவிற்பது அரசின் கொள்கை முடிவு. நாங்கள் தலையிட முடியாது” என்று சொல்லிவிட்டது. இனி எங்களுக்கு என்ன வழி? அதனால்தான் மதுக்கடையை அடித்து உடைத்தோம்!

naamthamilar-adhiradi1

“மதுவிலக்கு அவசியம்தான். ஆனால் வன்முறையான வழிதேவையா” என்று ஒரு விமர்சனம் இருக்கிறதே!

எது வன்முறை? இப்படி சொல்றவன் வீட்ல நாலு பேர், குடிச்சிட்டு செத்திருந்தா சொல்லுவானா? இதயம் மிக மோசமாக பாதிக்கப்பட்டால், அறுவை சிகிச்சை செய்கிறார்கள். சர்க்கரை நோய் முற்றிவிட்டால் காலை வெட்டி எடுக்கிறார்கள். . இதெல்லாம் வன்முறையா?. எங்களைப் பொறுத்தவரை இது, வன்முறை அல்ல நன்முறை. சமுதாயத்துக்கு நன்மை செய்வதற்காக நாங்கள் எடுத்த நடவடிக்கை.

திருச்சி சம்பவத்தில், கொலை மிரட்டல் வழக்கு போடப்பட்டிருக்கிறதே..

வழக்கு போடுவதற்கு காவல் துறைக்குச் சொல்லியா தரணும்? அரசு சொல்றதை இவங்க செய்யறாங்க! லட்சக்கணக்கானவர்கள் கூடிய திருச்சி மாநாட்டில் எந்தவித அசம்பாவிதமாவது நடந்ததா? ஆனால் மேடையில் பேசிய 42 பேர் மீதும் வழக்கு போட்டிருக்கிறது இந்த அரசு… அதுவும் தேசத்துரோக வழக்கு! மேடை போட்டு பேசறது தேசத்துரோகமாய்யா? ஆனால் இதெல்லாமே நல்லதுக்குத்தான். இந்த அரசு எத்தனை கேடுகெட்ட அரசு என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள் அல்லவா?

மதுக்கடை வழக்கு உங்கள் மீதும் பாயலாம் என்று சொல்லப்படுகிறதே..

பாயட்டுமே.. எல்லா மாவட்டத்திலும் என் மீது வழக்கு இருக்கு… சிறைச்சாலையும் எனக்கு புதுசில்லையே.. தாராளமா வழக்கு போடட்டும்.. எதிர்கொள்ள தயாராவே இருக்கேன்!

ஜெயலலிதாவை தொடர்ந்து ஆதரித்தவர், ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்.. அவரிடம் சொல்லி மதுக்கடைகளை மூட முயற்சிக்கலாமே என்று உங்கள் மீது ஒரு விமர்சனம் வைக்கப்படுகிறதே..

இது பயித்தியக்கரத்தானமான விமர்சனம். ஜெயலலிதாவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? அவரை நான் ஆதரிக்கறதா இருந்தா அத்தனை தொகுதியிலும் ஆதரிக்கணும். ஆனா,. காங்கிரஸ், பாஜக, தேமுதிக நிற்கும் தொகுதிகளில்தான் அதிமுகவை ஆதரித்தோம்? நாங்கள் தனிப்பட்ட யாருக்காகவும் செயல்படலை. நாங்கள் மக்களுக்காகனவர்கள். ஏற்கனெவே இருந்த எதிரிகள், துரோகிகளை ஒழிக்க அதிமுகவை ஆதரித்தோம். அது ஒரு யுக்தி. இப்போது 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று அறிவித்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். இப்போது ஏன் இந்த தேவையில்லாத விமர்சனம்?

தனித்து நிற்கப்போவதாக அறிவித்ததால், மக்கள் ஆதரவைப் பெறத்தான் இந்த மதுக்கடை உடைப்பு போராட்டம் என்றும் ஒரு விமர்சனம் உண்டு..

தவறு, தவறு, தவறு. மதுக்கடையை உடைத்தால் மக்கள் செல்வாக்கு கிடைக்கும் என்றால், திமுக, அதிமுக , மதிமுக எல்லாம் இப்படி செயல்பட்டு மக்கள்ட்ட நன்மதிப்பை பெற வேண்டியதுதானே! நான் இந்த மண்ணின் மகன். இந்த மக்கள்தான் என் பெற்றோர். என் அம்மாகிட்ட நான் என்ன செல்வாக்கு பெறணும்..? மக்கள் நலனுக்கான நடவடிக்கைதான் மதுக்கடை உடைப்பு போராட்டம்! 

naamthamilar-adhiradi2

மது ஒழிப்பில் உங்கள் அடுத்தகட்ட நடவடிக்கை?

பெருந்தலைவர் காமராசர் பிறந்தாள் கூட்டம் நாளை மறுநாள் (18ம் தேதி) தி.நகர்ல நடத்தறோம். அன்னைக்கு சாராயக்கடைகளின் எண்ணிக்கையை குறைங்க.. அப்படின்னு தமிழக அரசுக்கு கோரிக்கை வைப்பேன். ஆகஸ்ட் 15ம் தேதியிலிருந்தாவது அதை செயல்படுத்தணும். இல்லேன்னா, தமிழ்நாட்டுல இருக்கிற அத்தனை சாராயக்கடைகளையும் ஒரே நாள்ள அடிச்சு மூடிருவேன்.

தமிழகத்தில் மொத்தம் ஆராயிரத்துக்கு மேல் மதுக்கடைகள் இருக்கின்றன. அதைவிட, நான்கைந்து மட்டுமே இருக்கிற சாராய ஆலைகளை முற்றுகையிடலாமே என்ற திட்டம் உண்டா?

அட.. இது நல்ல யோசனையா இருக்கே.. இது பத்தி சீக்கிரமே ஒரு முடிவு எடுப்போம்..

சந்திப்பு: டி.வி.எஸ்.சோமு-https://www.facebook.com/reportersomu