chandrasekar

மானாமதுரை:

திருமணத்தை தள்ளிப்போட்ட ஆத்திரத்தில் பிளஸ் 2 மாணவியான மணமகளை, 17 இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்திய மணமகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கத்திக்குத்துபட்ட மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார் நந்தினி. இவருக்கும், மானாமதுரை அருகே உள்ள சோமாத்துார் கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவருக்கும் திருமணம் செய்ய  இரு குடும்பத்து பெரியவர்களும் முடிவு செய்தார்கள். நான்கு மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தமும் நடந்தது.

இந்த நிலையில், படிப்பை முடித்துவிட்டு திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறினார் நந்தினி. இதனால் திருமணம் திடீரென தடைபெட்டது.  சிறிது காலம் கழித்து திருமணம் செய்ய பெரியவர்கள் முடிவெடுத்தார்கள்.

இது, மணமகன் சந்திரசேகருக்கு, திருமணம் கடும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மணமகள் நந்தினி மீது ஆத்திரம் அடைந்தார். நேற்று மாலை, வழக்கம்போல பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக நந்தினி, தனது சைக்கிளை எடுக்க மானாமதுரை காந்தி சிலை அருகே வந்தார்.

அப்போது அங்கு வந்த  சந்திரசேகர், “திருமணத்துக்குப் பிறகும் நீ தொடர்ந்து படிக்கலாம். ஆகவே திருமணத்தை தள்ளிப்போட வேண்டாம்” என்று கூறியிருக்கிறார். இதற்கு நந்தினி மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த சந்திரசேகர், நந்தினியை சரமாரியாக கத்தியால் குத்தினார். நந்தினிக்கு 17 இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது.

சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்களும், சாலை பாதுகாப்பிற்கு நின்று கொண்டிருந்த காவல்துறையினரும் உடனடியாக ஓடி வந்து நந்தினியை மீட்டு, சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

அங்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் நந்தினி சேர்க்கப்பட்டார்.

கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற சந்திரசேகரை பிடித்து போலீசார் கைது செய்தார்கள்.

விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.