சிங்கம்புணரி

க்களை ஏமாற்ற காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் தேர்தல் நேரத்தில் தொடங்கப்படுவதாக ப சிதம்பரம் கூறி உள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல ஆண்டு காலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வரும் காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு தற்போது தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.  இந்த திட்டத்தின் முதல் கட்டமாக கரூர் மாவட்ட மாயனூரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தெற்கு வெள்ளாறு வரை 118 கிமீ தூரம் கால்வாய் வெட்டப்பட உள்ளது.

சுமார் ரூ. 6,971 கோடி ரூபாய் செலவில் நடைபெற உள்ள இந்த திட்டத்தை இன்று குன்னத்தூரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்க உள்ளார்.   இந்த விழாவில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.  இதற்காக குன்னத்தூர் பகுதியில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.   ஆயிரக்கணக்கான காவல்துறையினர் காவலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று சிங்கம்புணரியில் தேர்தல் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் உரையாற்றி உள்ளார்.  அவர், “கடந்த நான்கரை ஆண்டுகளாக இல்லாமல் தற்போது தேர்தல் நேரத்தில் காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தைத் தொடங்குவது மக்களை ஏமாற்றும் செயலாகும்.  மறைந்த ஜெயலலிதா அமைச்சரவையில் எடப்பாடி பழனிச்சாமி என ஒருவர் இருந்ததே நான் உட்படப் பலருக்குத் தெரியாது.

பிரதமர் மக்களைத் துச்சமாக நினைத்து என் கருத்துதான் நியாயமானது எனச் செயல்படுவதை ஏற்க முடியது.  பஞ்சாப் போல தமிழ்நாட்டிலும் பாஜகவைத் தோற்கடித்து அக்கட்சியின் ஆணவத்தை அடக்க வேண்டும்.  நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் தமிழக மக்கள் பாஜகவை அனைத்து தொகுதிகளில் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும்” எனப் பேசி உள்ளார்.