சென்னை:
தமிழக அரசு போக்குவரத்துக்கழக பேருந்தின் ஓட்டை வழியே ஒரு பெண் விழுந்த வீடியோ, ஊடகங்களில் பரவி பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக அந்தப் பெண் உயிர்தப்பினார்.
இந்த விவகாரத்தில், குறிப்பிட்ட பேருந்தின் ஓட்டுனர், நடத்துனர் மற்றும் தென்காசி அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் இரண்டுபேர் என நான்கு பேர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இது அரசு போக்குவரத்து ஊழியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
“பேருந்தின் தரம் மோசமடைவதற்கு ஆளும் தரப்பினரின் ஊழலும், உயரதிகாரிகளின் நிர்வாக சீர்கேடும்தான் காரணம். அவர்கள் தப்பித்துக்கொள்வதற்காக அப்பாவி தொழிலாளர்களை பணி நீக்கம் செய்கிறார்கள்” என்று குமுறுகிறார்கள் போக்குவரத்துத் தொழிலாளர்கள்.
அவர்களின் சார்பாக நம்முடன் பேசினார், ஏஐடியூசி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சம்மேளன பொது செயலாளர் ஜெயல லட்சுமணன்:
“தமிழகத்தில் சுமார் 22 ஆயிரம் அரசு பேருந்துகள் ஓடுகின்றன. இவற்றில் பெரும்பாலானவே ஓட்டவதற்கு தகுதியற்ற நிலையில் இருக்கின்றன என்பதுதான் உண்மை.
கைப்பிடிகள் உடைந்துகிடப்பதும், மழை பெய்தால் உள்ளே ஒழுகுவதுமாகவே பெரும்பாலான பேருந்துகள் இருக்கின்றன. “இது போன்ற வண்டியை ஓட்ட முடியாது” என்று நடத்துனரும், ஓட்டனரும் வாதிடுவதும் வழக்கமான நிகழ்ச்சியாகவே இருக்கிறது. ஆனால் உயரதிகாரிகள், நிர்ப்பந்தப்படுத்தி இதுபோன்ற வண்டிகளை ஓட்டச் சொல்கிறார்கள்.
பேருந்துகள் மோசமாக இருப்பதற்குக் காரணம், ஆளும் தரப்பினரின் ஊழலும், அதிகாரிகளின் நிர்வாக திறமையின்மையுமே ஆகும்.
தமிழகம் முழுதும் அரசுப் பேருந்துகளுக்காக 340 பனி்மணைகள் உள்ளன. சென்னையில மட்டும் 24 பணிபணைகள் உள்ளன. தவிர, தமிழகம் முழுதும் . 22 மண்டல தலைமை பணிமனை கள் இயங்குகின்றன.
இங்கெல்லாம் போதுமான ஊழியர்கள் இல்லை. அதோடு, இங்கு பயன்படுத்த அதிகாரிகளால் வாங்கப்படும் பொருட்கள் தரமின்றி இருக்கின்றன. இதற்குக் காரணம் உயர் அதிகாரிகளும், அவர்களை இயக்கும் ஆளுங்கட்சி பிரமுகர்களும்தான். கமிஷனுக்காக, தரமில்லாத பொருட்களை வாங்கி, மக்களின் உயிரோடு இவர்கள் விளையாடுகிறார்கள்.
அது மட்டுமல்ல தரமான அரசு பணிமனைகளை மூடி அனைத்து வேலைகளையும் தங்களுக்குத் தெரிந்த காண்ட்ராக்டர்களுக்குக் கொடுத்துவிடுகிறார்கள்.
இதற்கு ஒரு சோக சாட்சியாக இன்றும் இருப்பது குரோம்பேட்டை பணிமனை ஆகும். பத்து ஏக்கருக்கு மேல் பரந்துவிரிந்த இந்த பணிமனை ஆசியாவிலேயே பெரியது என்ற பெருமை பெற்றிருந்தது. இங்கு பாடி பில்டிங்க, ரீ கண்டிசன் செய்யப்பட்டது.
நவீன தொழில் நுட்பம் இல்லாத காலத்திலேயே டபுள் டெக்கர், டிரெய்லர் எல்லாம் இங்கு செய்யப்பட்டது. மலோசியா , இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கும் இங்கே பேருந்துகள் கட்டப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டன.
1970களின் ஆரம்ப காலத்தில் திமுக அரசால் துவங்கப்பட்ட இந்த பணிமனை அவர்களது ஆட்சி காலத்திலேயே இறங்குமுகத்தைச் சந்தித்து. அதாவது இங்கு வேலைகள் தரப்படுவது குறைக்கப்பட்டு தனியார் காண்ட்ராக்டர்களிடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டன. தற்போதைய அதிமுக ஆட்சி துவங்கியவுடன், இந்த மிகப்பெரிய பணிமனை முழுமையாக மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது. போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, தனக்குத் தெரிந்த கரூர் காண்ட்ராக்டருக்கு எல்லா வேலைகளையும் கொடுத்தார்.
ஆகவே புகழ் பெற்ற இந்த பணிமனை இப்போது வெறும் திடலாக கிடக்கிறது. இப்போது இங்கு தொழில்நுட்ப பயிற்சி பள்ளி இயங்குகிறது.
22 ஆயிரம் பேருந்துகளை இயக்கும் அரசு போக்குவரத்துக் கழகம் தானே டயர் மற்றும் உதிரி பாகங்களை உருவாக்கும் தொழிற்சாலையை ஆரம்பிக்கலாமே.. ! அதன் மூலம் தரமான பொருட்கள் உற்பத்தி ஆவதுடன், பலருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். ஆனால் கமிஷனுக்கு ஆசைப்பட்டு தரமில்லாத பொருட்களை வாங்கி பயணிகளின் உயிருக்கு உலை வைக்கிறார்கள்.
ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் மக்களை திசை திருப்ப ஓட்டுனர், நடத்துனர் போன்ற அடிமட்ட தொழிலாளிகளை வேலை நீக்கம் செய்கிறார்கள். இப்போதும் இதுதான் நடந்திருக்கிறது. இதை விடமாட்டோம்.
பணியாளர்களை வேலை நீக்கம் செய்ததை திரும்பப் பெற வேண்டும். நடந்த விபத்து குறித்து விசாரணை நடத்த வேண்டும், ஓட்டுமொத்தமாக அரசு பேருந்துகள் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தொழிலாளர்கள் இணைந்து தகுந்த நடவடிக்கை எடுப்போம்!” என்றார்.
நான்கு தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதை திரும்பப் பெறாவிட்டால், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று சில சங்கங்கள் முடிவெடுத்துள்ளன என்றும், அது குறித்த ஆலோசனைகள் நடக்கின்றன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.