புதுச்சேரி

பிரதமர் மோடி தன் மீது கூறிய ஊழல் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க தயாரா எனப் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுச்சேரியில் வரும் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு திமுக, காங்கிரஸ் அணி மற்றும் என் ஆர் காங்கிரஸ், பாஜக அணியும் முக்கிய போட்டியாளர்களாக உள்ளனர்.   இம்மாநிலத்தில் தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது.    அவ்வகையில் புதுவையில் பாஜக கூட்டணியை ஆதரித்து சமீபத்தில் பிரதமர் மோடி பிரசாரம் செய்தார்.

அப்போது மோடி, “புதுச்சேரியில் ஆட்சி முறை சரியாகச் செயல்படவில்லை.  இங்கு மக்கள் திட்டம் ஏதும் செயல்படுத்தப்பட வில்லை.  அனைத்து துறைகளிலும் ஊழல்கள் மலிந்துள்ளன.   இதை ஆளும் காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களே தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆட்சியில் இருந்த தங்கள் கட்சி முதல்வருக்கே காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை.  கடந்த முறை அவர் மோசமான ஆட்சியை நடத்தியதால் அவருக்கு மீண்டும் தேர்தல் வாய்ப்பு தரவில்லை எனத் தெரிகிறது.   அவர் கட்சிக்கு விசுவாசமாக பல ஆண்டுகள் இருந்த போதிலும் ஊழல் காரணமாக  ஒதுக்கப்பட்டுள்ளார்’ என உரையாற்றினார்.

இதையொட்டி புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர், “பிரதமர் மோடி எவ்வித ஆதாரமும் இல்லாமல் என் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி உள்ளார்.  இந்த ஊழல் குற்றச்சாட்டுக்களை பிரதமர் நிரூபிக்க தயாரா?    பிரதமர் புதுச்சேரிக்குத் தேவையான நிதியை அளித்தாரா? அல்லது தேர்தல் பிரசாரத்துக்கு வந்த பிரதமர் எந்த திட்டத்தையும் அறிவித்தாரா?” எனக் கேள்விகள் எழுப்பி உள்ளார்.