aa
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக அரசியலில் மக்களுடன் கலந்து பேசி, அவர்களின் தேவையறிந்து திட்டம் வகுக்கும் புதிய கலாச்சாரத்தை உருவாக்கும் நோக்குடன், மக்கள் பங்கேற்புடன் தேர்தல் அறிக்கையை தயாரித்து வெளியிட பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்தது. அதன்படி 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் வரைவுத் தேர்தல் அறிக்கையை கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர்-16 ஆம் தேதி சென்னையில் வெளியிட்டார்கள்.
பா.ம.க.வின் வரைவுத் தேர்தல் அறிக்கை தமிழகத்திலுள்ள மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் தொடங்கி காவல்துறை தலைமை இயக்குனர், தலைமைச் செயலர் வரையிலான அனைத்து நிலை அதிகாரிகள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், அரசு ஊழியர்கள், மகளிர் அமைப்பினர், தொழிலதிபர்கள், பொருளாதார வல்லுனர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு தரப்பினருடனும் தனித்தனியாக கலந்தாய்வு நடத்தி அவர்களின் கருத்துக்களை பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் விளக்கமாக கேட்டறிந்தார்.
அவர்கள் தெரிவித்த யோசனைகள் மற்றும் கோரிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றில் அவசியமானவை மற்றும் சாத்தியமானவை மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு பா.ம.க. தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழகம் எதிர்கொண்டு வரும் சிக்கல்களுக்கான தீர்வுகள், செயல்திட்டங்களுடன் காணும் தயாரிக்கப்பட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை மறுநாள்(15.04.2016) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு சென்னையில் வெளியிடப்படுகிறது. பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசுகிறார். முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இவ்வாறு கூறியுள்ளார்.