kuu
காங்கிரஸ் கட்சியின் தலைமை கேட்டுக்கொண்டால் ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடத் தயார் என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு அதிரடியாக தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 227 தொகுதியிலும், அதன் கூட்டணி கட்சிகள் 7 தொகுதியிலும் போட்டியிடுகின்றன. கடந்த 4 ஆம் தேதி அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் போட்டியிடுகிறார். சென்னையில் பிரசார பொதுக்கூட்டத்தை முடித்துள்ள அவர், தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
திமுக கூட்டணியில், திமுக 173 தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரிகிறது. அதன் கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், ஜெயலலிதா போட்டியிடும் அதிமுக தொகுதி திமுக வசம் உள்ளது. இந்நிலையில், ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதி, திமுகவிடம் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு மாற்றப்பட உள்ளதாகவும், காங்கிரஸ் கட்சி சார்பாக அக்கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
இந்தநிலையில் இன்று திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, ஆர்.கே. நகர் தொகுதியை தி.மு.க. வைத்துக்கொள்கிறதா?, அல்லது காங்கிரசுக்கு ஒதுக்கப்படுகிறதா? என்பது இன்று தெரிந்துவிடும். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை குஷ்பு, காங்கிரஸ் தலைமை கேட்டுக் கொண்டால் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட தயார் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.