கூட்டத்தில் ஜெய்சங்கர், ரவி
கூட்டத்தில் ஜெய்சங்கர், ரவி

 
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் மற்றும் மேலாண்மையியல் துறைகளில் உதவிப்பேராசிரியர்களாக பணிபுரிபவர்கள் ஜெய்சங்கர் மற்றும் ரவி ஆகியோர். இருவரும் வன்னியர் சமூக பிரிவை சார்ந்தவர்கள். இவர்கள் நெல்லையில் பாட்டாளி மக்கள் கட்சியில் கூட்டம் ஒன்றில் சமீபத்தில் கலந்து கொண்டது சர்ச்சையாகி உள்ளது.
இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடமும், மாநில தேர்தல் ஆணையரிடம்,  மாநில தேர்தல் கண்கானிப்பாளரிடமும் முகமது கான் என்ற நெல்லை பல்கலைக்கழக குற்றவியல் துறையின் ஆராய்ச்சி மாணவர் புகார் அளித்துள்ளார்.
ஏற்கனவே தன் மீது பொய் வழக்கு போட்டு தன்னை சிறையில் அடைத்தார் எனக்கூறி ஜெய்சங்கருக்கு எதிராக நீதிமன்றத்தில் பல பிரிவுகளில் முகமதுகான் தொடுத்திருக்கும் குற்ற வழக்கில் ஏற்கனவே ஜெய்சங்கர் சாதீய காழ்ப்புணர்வுடன் செயல்படக்கூடியவர் என்ற குற்றசாட்டுகளை முன்வைத்திருக்கிறார். மேலும் முகமதுகான் கூறும்போது
“அவரைப்பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். 2009 காலகட்டங்களிலேயே ஒரு அட்டவணைப்படுத்தப்பட்ட மாணவர், மாணவர் பேரவையில் ஒரு பொறுப்பை பெற்றதற்காக இளக்காரமாக பேசியதால் “தீண்டாமை ஒழிப்பு, சமத்துவம் பற்று பேசும் நீங்களே எப்படி இப்படி நடந்து கொள்ளலாம்” என அந்த மாணவனுக்கு ஆதரவாக நான் இவருடன் மல்லுக்கட்டியிருகிறேன். மேலும் எனது சீனியர்கள் பலரும் இவர் சாதீய துவேசத்துடன் செயல்படக்கூடியவர் என்று கூறியுள்ளனர். 2005 களில் இவர் கையாண்ட Caste and Communal Violence என்ற பாடம் கூட சில இவரது பேச்சு நடவடிக்கைகள் சரியில்லை என்று மாணவர்கள் சிலர் எழுப்பிய சர்ச்சைகளின் காரணமாக நீக்கப்பட்டு அந்த பிரச்சினை பூசி மொழுகப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜெய்சங்கரும், பாலியல் குற்றவாளி ஒருவரைக்காக்க இவருடன் கூட்டாளியாக செயல்பட்டு வரும் ரவியும் கடந்த 15.03.2016 அன்று நெல்லையில் ஆர்யாஸ் ஓட்டலில் பட்டாளி மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் அவர்கள் கலந்து கொண்டு நடத்திய அக்கட்சியின் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள்.  மேலும் உயர்கல்வியில் என்ன என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் எனவும் ஜெய்சங்கர் பேசியிருக்கிறார். அந்த கூட்டத்தின் ஒளிபரப்பு உள்ளூர் கேபிள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதை பதிவு செய்திருக்கிறேன்.
முகமது கான்
முகமது கான்

தேர்தல் விதிகள் நடைமுறையில் இருக்கும்போது அரசு ஊழியர்களான இவர்கள் இப்படிப்பட்ட கூட்டங்களில் கலந்து கொள்வதே தவறு என்ற சட்ட விதிகளின் அடிப்படையில் இவர்கள் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளேன்.  அந்த புகாரின் அடிப்படையில் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்கான அதிகாரிகள் விசாரணையை தொடங்கி பல்கலைக்கழக பதிவாளரிடம் அறிக்கை கேட்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே நான் ஜெய்சங்கர் மற்றும் ரவி ஆகியோர் மீது நெல்லை நீதிமன்றத்தில் என் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்ததாக பல்வேறு பிரிவுகளில் குற்ற வழக்கு ஒன்றை தொடுத்துள்ள நிலையில், குஜராத்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசியராக பணிபுரியும் வாய்ப்பு ஜெய்சங்கருக்கு கிடைத்துள்ளது. ஜெய்சங்கர் மீது வழக்கும், பல்வேறு குற்றச்சாட்டுகளும் நிலுவையில் இருக்கும் நிலையில் குஜராத் செல்வதற்கு தடையில்லா சான்று வழங்க பல்கலைக்கழக துணைவேந்தர் தயங்கி வரும் நிலையில் இவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டதன் பிண்ணனி சந்தேகத்திற்குரியதாய் இருக்கிறது. தன் மீதான வழக்கு மற்றும் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிச்செல்ல இவர் தற்போது தனது சாதீய முகத்தை வெளிப்ப்படையாக பயன்படுத்த முயல்வதாகவே தோன்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக பேராசிரியர் ஜெய்சங்கரை தொடர்புகொண்டு பேசினோம். அவர், “என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல. தவிர கல்வி குறித்து விவாதிக்கும் கூட்டம் என்பதால் அதற்கு போனேன். மற்றபடி நான் சாதீய கண்ணோட்டத்துடன் செயல்படுவன் அல்ல” என்றார்.