டில்லி
நாட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்தும் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.
கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவலால் இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு ஏராளமானோர் வாழ்வாதாரம் பாழாகி உள்ளது. இதையொட்டி மத்திய மாநில அரசுகள் ரேஷன் கார்டுகள் மூலம் இலவச உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கினர். ஆனால் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு இந்த உதவி கிடைக்கவில்லை.
இதையொட்டி பாலியல் தொழிலாளர்கள் சார்பில் ஒரு பொது நல மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் பாலியல் தொழிலாளர்கள் கொரோனா ஊரடங்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் வாக்காளர் அட்டை, ரேஷன் கார்ட் உள்ளிட்ட அனைத்தும் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்டிருந்தது
உச்சநீதிமன்ற நீதிபதிகளான நாகேஸ்வர ராவ் மற்றும் கவாய் ஆகியோரின் அமர்வில் நேற்று இது விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், “மாநில மற்றும் மத்திய அரசுகள் பாலியல் தொழிலாளர்களுக்கு வாக்காளர் அட்டை மற்றும் ரேஷன் கார்டுகள் வக்ஷங்க வேண்டும்” என உத்தரவு இட்டுள்ளன. இந்த வழக்கு 4 மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.