டெல்லி: இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசி தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
உலகநாடுகளை புரட்டிப்போட்டு வரும் கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தியாவிலும், உள்நாட்டு நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் என்ற பெயரில் தடுப்பூசி தயாரித்துள்ளது. அதுபோல, சீரம் நிறுவனம், ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தை தயாரித்து உள்ளது. இந்த இரு மருந்துகளும் பயனர்களுக்கு செலுத்த மத்தியஅரசு ஒப்புதல் வழங்கி, செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இதற்கிடையில், கோவேக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த தடுப்பூசியின் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனை தற்போதுதான் நடந்து வருகிறது. அதனால் அதன் பாதுகாப்பு குறித்து பலர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்த தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் சிலர் பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து, கோவாக்சின் தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நாடு முழுவதும் பிரபலமான 11 மருத்துவமனைகளில், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், 18 முதல் 55 வயது உள்ள 375 பேர் தேர்வு செய்யப்பட்டு சோதனை நடத்தப்பட்டதாகவும், அவர்களுக்கு, 14 நாள் இடைவெளியில் 2 டோஸ் கோவாக்சின் தடுப்பு மருந்து செலுத்தி சோதித்துப் பார்க்கப்பட்டது.
இந்த தடுப்பூசி ஊசி போட்ட இடத்தில் சிறிது வலி மட்டுமே இருந்தது என்றும் மேலும், சிலருக்கு காய்ச்சல், சோர்வு, தலைவலி போன்ற பொதுவான பக்கவிளைவு தான் இருந்தது. யாருக்கும் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது . அதனால், கோவாக்சின் பாதுகாப்பான, நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டக்கூடிய தடுப்பூசி என்று ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு ள்ளது.