‘குற்றப்பரம்பரை’ கதையை படமாக்குவதில் டைரக்டர்கள் பாரதிராஜா, பாலா ஆகிய இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த கதைக்கு எழுத்தாளர்கள் ரத்னகுமார், வேல ராமமூர்த்தி ஆகிய இருவரும் உரிமை கொண்டாடுகிறார்கள். இதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆங்கிலேயர்கள் தமிழகத்தில் உள்ள 90 சாதி மக்களை குற்றப்பரம்பரையினர் என்று பட்டியலிட்டு அவர்கள் மீது ரேகை சட்டத்தை திணித்து கொடுமைப்படுத்திய வரலாற்று பின்னணியை மையமாக வைத்து இந்த கதை எழுதப்பட்டு உள்ளது. குற்றப்பரம்பரை என் கதை. அதை பாலா இயக்கினால்தான் சரியாக இருக்கும் என்று வேல ராமமூர்த்தி கூறியுள்ளார்.
ரத்னகுமாரோ, ‘‘இது எனது கதை. பாரதிராஜாதான் டைரக்டு செய்ய வேண்டும்’’ என்கிறார். இதுகுறித்து ரத்னகுமார் அளித்த பேட்டி வருமாறு;-
‘‘நான், கிழக்கு சீமையிலே, கருத்தம்மா, கடல்பூக்கள், தமிழ் செல்வன், மணிகண்டா ஆகிய படங்களுக்கு கதை-வசனம் எழுதி உள்ளேன். எஸ்.ஜே.சூர்யா நடித்த திருமகன், மற்றும் சேனாதிபதி, செங்காத்து பூமியிலே படங்களை டைரக்டும் செய்து இருக்கிறேன். 1997-ல் ‘குற்றப்பரம்பரை’ படத்தின் கதையை எழுதி அதனை எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்தேன்.
இந்த கதையை படமாக்கும்படி பாரதிராஜாவிடம் சொன்னேன். அவருக்கு கதை பிடித்ததால் சிவாஜி கணேசனை தந்தை வேடத்திலும் சரத்குமாரை மகன் வேடத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்து படத்தை இயக்க தயாரானார். இளையராஜா இசையில் இந்த படத்துக்காக ஒரு பாடலும் தயாரானது. ஆனால் சிவாஜிகணேசனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் பட வேலைகள் நிறுத்தப்பட்டன.
தற்போது பாரதிராஜா மீண்டும் அந்த படத்தை எடுக்க தயாராகி வந்த நிலையில், குற்றப்பரம்பரை படத்தை பாலா இயக்கப்போவதாக அறிவிப்பு வந்துள்ளது. அந்த படத்தின் கதையை வேல ராமமூர்த்தி எழுதி இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பாலாவை பாரதிராஜா தொடர்புகொண்டு தடுக்க முயற்சித்தும் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது. பாரதிராஜாவுக்கு பாலா துரோகம் செய்கிறார். ‘குற்றப்பரம்பரை’ கதை என்னுடையது. நான் எழுதிய கதையை திருடி உள்ளனர். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. குற்றப்பரம்பரை படத்தை பாலா இயக்க கூடாது. மீறி இயக்கினால் அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்வேன்’’என்று கூறி உள்ளார்.