டெல்லி:
பாகிஸ்தான் சிந்து பல்கலைக்கழகத்தில் கடந்த மார்ச் 8 ம் தேதி மாணவ மாணவிகள் சிலர் ஹோலி பண்டிகை கொண்டாடினர். இந்து பண்டிகையை பல்கலைக்கழக வளாகத்தில் கொண்டாடியதற்கு நிர்வாகம் தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சம்மந்தப்பட்ட மாணவ மாணவிகள் எழுத்துப்பூர்வ மன்னிப்பு கேட்க வேண்டும் என பல்கலை நிர்வாகம் நிர்பந்தம் செய்துள்ளது.
ஹோலி கொண்டாடிய 10 பேரில் 4 பேர் இந்து, 6 பேர் முஸ்லிம். இதர பல்கலைக்கழகங்களோடு ஒப்பிடுகையில், சிந்து பல்கலைக்கழகத்தில் அதிகப்படியாக இந்து மாணவ மாணவிகள், ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர் அனைவரும் முஸ்லிம் மாணவர்கள், ஊழியர்களோடு இனக்கமாக இருந்து வருகின்றனர்.
இதில் ராஜா தீபக் என்ற மாணவர் சமர்ப்பித்த எழுத்துப்பூர்வ மன்னிப்பு கடிதம் வெளியில் கசிந்தது. இது சமூக வளைதளங்களில் அதிக அளவில் பரவியதால் தற்போது பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. மேலும், அந்நாட்டு செய்திதாளில் இது குறித்த செய்தி வெளியானது.
ஹோலி பண்டிகை அன்று ஒருவர் மீது ஒருவர் கலர் பொடிகளை தூவிக்கொள்வது பாரம்பரியமாக நடந்து வரும் விஷயமாகும். இதற்காக மாணவர்களிடம் மன்னிப்பு கடிதம் கோரிய விவகாரம் மனித உரிமை மீறல் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
‘‘இது பல்கலைக்கழக விதிகளின் படி தவறு. ஒழுங்கு முறை நடவடிக்கை தான் மாணவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி இந்து மதத்திற்கு எதிரான நடவடிக்கை இல்லை’’ என்று துணை வேந்தர் விளக்கம் அளித்துள்ளார். ‘‘எங்களுக்கு முன்னாள் பயின்ற சீனியர் மாணவர்கள் இந்த பண்டிகையை பல்கலைக்கழக வளாகத்தில் கொண்டாடினர். இதன் அடிப்படையில் தான் நாங்களும் கொண்டாடினோம்’’ என்று ஒரு மாணவர் தெரிவித்தார்.