கொழும்பு-

இந்திய ராணுவத்தினரால் வடக்கு பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட காரணத்தால் ராஜீவ் காந்தியை கொலை செய்ய வேண்டுமென தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தம்மிடம் கூறியதாக விநாயகமூர்த்தி முரளிதரன் என்கிற  கருணா தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்த அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

திலீபனின் மரணத்துக்குப் பிறகு போருக்கு தாங்கள் ஆயத்தமாகியிருந்த நேரத்தில், வல்வெட்டித்துறையில் இராணுவ ஜீப் மீது திடீர் தாக்குதல் நடத்தியதாக கூறினார். மேலும் அந்தத் தாக்குதல் சம்பவத்துடன் இந்திய இராணுவத்தினர் தொடர் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியதாகவும் வடக்கில் மட்டுமன்றி தெற்கிலும் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, இந்திய இராணுவம் மிகவும் விசாலமானது.

அவர்கள் தாக்குதல் நடத்தி முன்னேறி வந்தனர்.  அப்போது கிராமங்களில் வசித்த பெண்களை  இந்திய ராணுவத்தினர்  பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுத்தியதாக கூறினார்.

இது குறித்து பிரபாகரன் கடும் கோபத்துடன் இருந்ததாகவும், இறுதியில் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்ட ஒன்பது பெண்களை இந்திய இராணுவத்தினர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக குறிப்பிட்டுள்ள கருணாகரன், இதனால் ஆத்திரடைந்த பிரபாகரன் “ நாம் ராஜீவ் காந்தியை கொலை செய்ய வேண்டும்” என தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.